முருகன், பாயஸ் மற்றும் ஜெயக்குமார் நீண்ட விசாரணைகளின் பின் விடுவிப்பு: விமான நிலையத்தில் இருந்து வெளியேறினர்
முருகன் உள்ளிட்டவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியேறினர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இன்று காலை சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர விசாரணைகளின் பின் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முருகன் உள்ளிட்ட மூவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதில் சிக்கல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன் உள்ளிட்ட மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த மூவரும் சட்ட விரோதமாக கடவுச்சீட்டு இன்றி இந்தியா சென்றமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானத்திருப்பதாக தமிழக சட்டத்தரணி புகழேந்திக்கு விசாரணையாளர்கள் அறிவித்துள்ளதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.
அவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் குறித்த மூவரும் நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றின் ஊடாக பிணையில் அழைத்துவர முடியும் என சட்டத்தரணி புகழேந்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்திளார் கூறியுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ், வேலன் சுவாமிகள் மற்றும் முருகனின் தாயார் உள்ளிட்டவர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகன், பயஸ் மற்றும் ஜெயக்குமாரிடம் கிடுக்குப்பிடி விசாரணை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ள முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரிடம் பலமணி நேரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைகள் முடிந்த நிலையில், தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியார் தெரிவித்தார்.
இன்று காலை 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்த அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் கூறினார்.
இந்நிலையில், முருகன் சார்பில் வழக்காடிய தமிழக சட்டத்தரணி புகழேந்தி குறித்த மூவரின் வருகைக்காகவும் விமான நிலைய வளாகத்தில் காத்திருப்பதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
பலத்த பாதுகாப்புடன் தாயகம் திரும்பிய முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூன்று இலங்கைப் பிரஜைகளும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.
பயண ஆவணங்களை வழங்கிய இலங்கை அதிகாரிகள்
தமிழ் மக்களின் நீண்டகால போராட்டங்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் நேற்று ஏப்ரல் 2 ஆம் திகதி மாலை மூவரும் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இறுதி அனுமதி கிடைத்ததன் பின்னர் சிறப்பு முகாமை பொறுப்பாளர்கள் அவர்களை விடுவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொழும்புக்கு அனுப்புவதற்காக பொலிஸ் வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் மூவரும் சென்னைக்கு அழைத்துச் வரப்பட்டனர்.
இன்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து இவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருக்கு அனைத்து பயண ஆவணங்களையும் இலங்கை அதிகாரிகளே வழங்கியுள்ளனர்.
சாந்தனை விடுவிக்க நடவடிக்கை
மரண தண்டனை விதிக்கப்பட்டு 33 ஆண்டுகள் சிறையில் இருந்த மூவரையும் இந்திய உச்ச நீதிமன்றம் 2022 முதல் நவம்பர் 12ஆம் திகதி விடுதலை செய்ததுடன், திருச்சியில் உள்ள திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு அருகில் செயல்படும் சிறப்பு முகாமில் தடுத்துவைக்கும் உத்தரவை பிறப்பித்தது.
முகாமில் இருக்கும் இவர்களை தாயகத்துக்கு திரும்ப இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், சிறப்பு முகாமில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு சாந்தனை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
என்றாலும், சிறுநீரகக் கோளாறால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சாந்ததன், கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி உயிரிழந்தார்.
தாயகம் திரும்பியுள்ளனர்
இவரது உடல் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த பின்புலத்திலேயே முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை உடனடியாக தாயகத்துக்கு அனுப்ப இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன.
அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் ஊடாக தமிழ் அரசியல் தலைமைகளும் இவர்களை தாயகம் திரும்ப அனுமதியளிக்குமாறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதன் பிரகாரம் இவர்கள் இன்று காலை தாயகம் திரும்பியுள்ளனர். தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவர்களது ஆவணங்கள் சாரிபார்க்கப்பட்டு வருகிறது.
விமான நிலையத்தில் இருந்து இவர்கள் கொழும்புக்கு வருகை தர உள்ளதுடன், பின்னர் தமது சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர்.
இந்த நிலையில் மூவரின் வருகையையும் எதிர்பாத்து விமான நிலையத்தில் இவர்களது குடும்பத்தினரும், ஊடகவியலாளர்கள் காத்திருக்கின்றனர்.