சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் விடுவிப்பு: இன்றைய முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Local News Updates 04.04.2024

சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் விடுவிப்பு

முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹலவத்தை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 68 சந்தேகநபர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து ஹலவத்தை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய சேவைகளை சீராக செயற்படுத்த பணிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டி - காத்தான்குடி மத்திய கல்லூரி வெற்றி

ரமழான் மாதத்தை முன்னிட்டு Colombo Commodities நிறுவனம் வருடம் தோறும் நாடளாவிய ரீதியில் நடத்தி வரும் அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நிகழ்வில் பிரதம அதிதியாக Colombo Commodities நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எம்.ஸி. பஹார்தீன் கலந்துகொண்டார்.

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர்

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையை அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..

போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது

பாணந்துறை, ஹிரண பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் போதை மாத்திரைகளுடன் 38 வயதுடைய நபரொருவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடமிருந்து சுமா 76,796 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வால் நட்சத்திரத்தை வெற்றுக் கண்ணால் பார்வையிடும் அரிய வாய்ப்பு

எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 12P/Pons-Brooks என்ற விஞ்ஞான பெயர் கொண்ட வால் நட்சத்திரத்தை இலங்கையர்கள் வெற்றுக் கண்ணால் காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் ஜானக அடசூரிய தெரிவித்துள்ளார்.

மைத்திரிக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘கட்டாய சடலம் எரிப்பு’ - முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும்

கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட ‘கட்டாய சடலம் எரிப்பு’ (ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் என்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நீர்த்தேக்கத்திலிருந்து இளம்பெண் சடலமாக மீட்பு

ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெல்மார் தோட்டம் மேல் பிரிவில் உள்ள சிறிய நீர்த்தேக்கத்தில் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூன்று மாதங்களில் 75,000 இலங்கையர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 75,000 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அத்துடன், தொழில் நிமித்தம் வெளிநாடு சென்ற இலங்கையர்கள் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் 963.8 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.

கச்சதீவு பிரச்சினையை கையில் எடுத்தால் இந்தியா பாரிய விளைவுகளை சந்திக்கும்

கச்சதீவு இலங்கை மக்களின் இறையாண்மைக்கு உட்பட்டது. கச்சதீவு பிரச்சினையை இந்திய அரசாங்கம் கையில் எடுக்குமாக இருந்தால், பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அந்த நாடு உணர்ந்து கொள்ள வேண்டுமென அகில இலங்கை மீனவ தொழிற்சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மீள்சுழற்சி செய்யக்கூடிய பொருட்களிலிருந்து பேனா உற்பத்தி

இலங்கையில் பேனா உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை மீள்சுழற்சி செய்யும் நிறுவனம் இல்லாததால், மீள்சுழற்சி செய்யக்கூடிய பொருட்களிலிருந்து பிளாஸ்டிக் பேனாக்களை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட வேண்டுமென சுற்றுச்சூழல் இயற்கை வளங்களின் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போலி வைத்தியர்களுக்கு எதிராக சுகாதார அமைச்சு நடவடிக்கை

போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்தியசாலைகள் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேன காலமானார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேன (04) இன்று அதிகாலை காலமானார். சுகயீனம் காரணமாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலுள்ள மாணவர்களே அதிக வீதி விபத்துகளை எதிர்கொள்கின்றனர் - கல்வி அமைச்சர்

நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது, மக்கள் செறிவாக வாழும் கொழும்பு நகரிலுள்ள பாடசாலை மாணவர்கள் வீதி விபத்துகளை அதிகம் எதிர்கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த நிலையை மாற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், வீதி பாதுகாப்புத் திட்டங்கள் பெரும் உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மழை பெய்யக் கூடிய சாத்தியம் - இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

விவசாய நவீனமயமாக்கல் சபை விரைவில் - ஜனாதிபதி

விசாயத் துறையுடன் தொடர்புடைய அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களை மறுசீரமைப்புச் செய்தல், கண்காணிப்பதற்காக ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் விவசாய நவீன மயமாக்கல் சபையொன்றை நிறுவ உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் - விரைவில் தீர்வு

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதற்காக நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதா கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.