வசந்த கால கொண்டாட்டம் ஆரம்பம்: தீவிரமடையும் பொலிஸ் பரிசோதனைகள்
நுவரெலியாவில் வசந்த கால கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலன் கருதியும் பொதுமக்களின் நலன் கருதியும் நுவரெலியா பிரதான நகர், கிரகரி வாவிக்கரை, ஹாவாஎலிய பகுதிகளில் நேற்று புதன்கிழமை சுகாதார அதிகாரிகள் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டனர்.
குறித்த பரிசோதனை நடவடிக்கை ஹட்டன் மற்றும் தலவாக்கலை பகுதிகளில் இருந்து சுகாதார அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நுவரெலியா மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிகாரிகளுடன் இணைந்து ஐந்து குழுக்களாக பிரிந்து சென்று பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மக்களின் நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்கள் , பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்தல், சுகாதாரமற்ற உணவகங்கள் போன்றவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் உணவக ஊழியர்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் எடுத்துரைத்ததுடன் , உணவக உரிமையாளர்கள் எச்சரிக்கைபட்டுள்ளதோடு நுவரெலியா பிரதான நகரில் உள்ள பழக்கடைகளிலும் நுகர்வுக்கு பொருத்தமற்ற அழுகிய நிலையில் சில பழங்கள் அகற்றப்பட்டு செயற்கையாக பழங்களை பழுக்கவைப்பதற்காக பயன்படுத்தகூடிய இரசாயனங்கள் குறித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்வதால் பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் தொடர்ந்து வரும் நாட்களில் நுவரெலியா மாநகரில் திடீர் பரிசோதனைகள் இடம்பெறும் எனவும் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாமல் , சீர் செய்யப்படாவிடின் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வர்த்தக நிலையத்தில் உரிமையாளர்கள் எச்சரிக்கைப்பட்டுள்ளது.