பொலிஸ்மா அதிபர் கட்டுவாப்பிடிய தேவாலயத்துக்கு திடீரென ஏன் வந்தார் ?: கத்தோலிக்க திருச்சபை விமர்சனம்

OruvanOruvan

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் எந்தவித முன்னறிவிப்பும் பெறவில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பேராயருக்கு முன்னதவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் கட்டுவாப்பிட்டிக்கு விஜயம் மேற்கொண்டு புனித செபஸ்தியார் தேவாலயத்திற்குச் சென்று பாதுகாப்பு நிலைமைகளை பார்வையிட்டதுடன் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நலன்களையும் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் பொலிஸ்மா அதிபரின் செயற்பாட்டை கத்தோலிக்க திருச்சபை விமர்சித்துள்ளது.

இதேவேளை, "பாதிக்கப்பட்டவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் உணவுப் பொதி வழங்குவதும், மெழுகுவர்த்தி கொளுத்துவது அவமானம், இவ்வாறு வெள்ளை பூண்டை நசுக்குவதில் அர்த்தமில்லை." என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தினத்தன்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தோம். பொலிஸ்மா அதிபரின் வருகை குறித்து எங்களுக்கு எதுவித தகவலும் வழங்கவில்லை. உணவுப் பொதிகளை அவர்களிடம் கேட்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் உண்மையை வெளிப்படுத்துங்கள் நாங்கள் நியாயத்தை மட்டுமே கேட்கிறோம்.” என கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தின் அருட்தந்தை மஞ்சுள நிரோஷன், வலியுறுத்தியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.