வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் வெப்பம்: கடுமையான எச்சரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நாளை முதல் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனை வளிமண்டலத் திணைக்கள அதிகாரி நாகமுத்து பிரதீபராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதானது “கரையோரப் பகுதிகளில் ஓரளவு வெப்பம் குறைவாக காணப்பட்டாலும் உள்நிலப்பகுதிகளில் வெப்பநிலை மிக உயர்வாக காணப்படும்.
வடக்கு மாகாணத்தின் வவுனியா,மாங்குளம், முறிகண்டி, நட்டாங்கண்டல், துணுக்காய், ஓமந்தை, கரிப்பட்ட முறிப்பு, சின்னத்தம்பனை, பாலைப்பாணி, மூன்றுமுறிப்பு, ஐயன்குளம், மடு,கீரி சுட்டான், தட்டாங்குளம், பகுதிகளில் பகல் காலை 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை பகல் பொழுது வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் இனை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வடக்கு மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளின் பல இடங்களில் வெப்ப அலை (Heat Waves) வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னரும் காலை 7.00 மணிக்கு முன்னரும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆனாலும் இம்மழை அதிகரிக்கும் வெப்பநிலையின் பாதிப்புக்களை தற்காலிகமாக தணித்து குறுகிய காலத்திற்கு மட்டுமே சௌகரியமான வானிலையை( Comfort Weather ) உருவாக்கும்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும்.எனவே அதிகரிக்கும் வெப்பநிலை, வெப்ப அலை தொடர்பிலும் எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.