ஒரே மேடையில் சஜித்துடன் விவாதிக்க தயார்: ஐ.ம.ச.வின் அழைப்பை ஏற்றுக்கொண்ட அனுரவின் தரப்பு

OruvanOruvan

Anura Dissanayaka VS Sajith Premadasa

இலங்கை நாட்டில் காணப்படுவதைப் போல அரசியல் கட்சிகள் உருவான ஒரு நாடு வேறேங்கும் இல்லை.

தேர்தல் ஒன்று நெருங்கும் சந்தர்ப்பத்தில் புதிதாக காளான் முளைப்பது போல் புதிய புதிய அரசியல் கட்சிகள் உருவாகி விடுகின்றன.

இலங்கை அரசியல் களம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புக்களையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. ஆளுக்கு ஆள் சாணக்கியமாக காய்களை நகர்த்த தொடங்கியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறும் நோக்கில் சலுகைகளை நாட்டு மக்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளார். மறுபுறத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தாமே வெற்றி பெறுவர் எனவும் மக்கள் தம்பக்கமே உள்ளனர் எனவும் மேடைக்கு மேடை கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் மேடையினை அலங்கரிக்க ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசவுடன் பகிரங்க விவாதத்திற்கு அனுரகுமார திஸாநாயக்க தயாராக இருக்கிறார் என தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தமது கட்சியின் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் பொது விவாதம் ஒன்றிற்கு ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த அழைப்பிற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கையின் சமகால அரசியல் மற்றும் எதிர்வரும் அரசாங்கத்தில் தமது கட்சிகளின் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் விவாதம் நடத்தவும் தயாராக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்பதால், ஜனாதிபதி வேட்பாளர்களின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து விவாதம் நடத்துவது மிகவும் பொருத்தமானது. இதன் மூலம் அவர்களின் கொள்கைகளை மக்களுக்கு அறியக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.