யாழில் மோதல் - 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North - East News Updates 02.04.2024

யாழில் மோதல் - 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 22 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பில் நூறு குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள 100 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பிரதேச செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

யாழில் பற்றி எரிந்த வீடு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு பகுதியில் வீடு ஒன்று தீயில் எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவமானது நேற்றையதினம்(01) இடம்பெற்றுள்ளதுடன் குறித்த தீவிபத்தில் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சாய்ந்தமருது பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கை

சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் சுகாதார குழுவினர் இன்று மூன்றாவது தடவையாகவும் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டார்.