சுகாதார ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது: இலங்கையின் முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

OruvanOruvan

Short Local News Updates 02.04.2024

சுகாதார ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை 03 வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சிடமிருந்து பதில் கிடைத்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சதொசயில் புதுவருடச் சலுகைப் பொதி

புத்தாண்டை முன்னிட்டு, நாட்டிலுள்ள அனைத்து சதொச கிளைகளிலும் புதுவருடச் சலுகைப் பொதியை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 4500 ரூபாய் மதிப்புள்ள 11 உணவுப் பொருட்கள் அடங்கிய உணவுப் பொதியை 3420 ரூபாய் சில்லறை விலையில் வாங்க முடியும்.

OruvanOruvan

வற் சட்டத்தில் திருத்தம் - மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் 36 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்காக, எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பிற்கு கோரியிருந்த நிலையில், கட்டளைக்கு ஆதரவாக 55 வாக்குகளும், எதிராக 19 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து நாடாளுமன்றம் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது

பொருளாதாரத்தில் வளர்ச்சி- உலக வங்கி அறிக்கை

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமானளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 2.2% பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார வீழ்ச்சியின் பின்னர், மீண்டும் ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் விலை குறைக்கப்படவுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது. இதன்படி, முட்டை ஒன்றின் புதிய விற்பனை விலை 36 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரின்றி 2927 குடும்பங்களைச் சேர்ந்த 9866 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் கம்பஹா மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரை பிணையில் விடுவிப்பதற்கான கோரிக்கை நிராகரிப்பு

கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிப்பதற்காக கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மாணவிகளுக்கு நாப்கின் வழங்க அமைச்சரவை அனுமதி

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார நாப்கின் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி, சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் நாப்கின்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி. விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தாண்டு அதிர்ஷ்டத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு

சிங்களப் புத்தாண்டுக்கான அதிர்ஷ்ட சீட்டுகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்குமாறு தேசிய அதிர்ஷ்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இது தொடர்பான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தபால்காரர்கள் பற்றாக்குறை - கடித விநியோகத்தில் தாமதம்

தபால்காரர்களின் பற்றாக்குறை காரணமாக சில மாகாணங்களில் ஒரு நாள் தாமதத்தின் கீழ் கடித விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கடித விநியோக நடவடிக்கைகள் பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு வருவதாகவும் தபால் மா அதிபர் பி. சத்குமார் கூறுகிறார்.

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் போராட்டம் ஒத்தி வைப்பு

இன்று காலை ஆரம்பிக்கப்படவிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதால் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை 24 மணித்தியாலங்களுக்கு ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வங்கித் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், வங்கித் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அனுமதி

பல்கலைக்கழகங்களுக்கு புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பத்து வைத்தியசாலைகளில் நான்கு மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு

எழுபத்திரண்டு தொழிற்சங்கங்களின் சுகாதார ஊழியர்கள் இன்று (02) பத்து வைத்தியசாலைகளில் நான்கு மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உலகில் அதிக தேங்காய்களை வீணடிக்கும் முதல் நாடு இலங்கை

உலகில் அதிக தேங்காய்களை வீணடிக்கும் முதல் நாடாக இலங்கை மாறியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தென்னை பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், தேங்காயை நுகர்வுக்கு பயன்படுத்துவதில் புதிய தொழில்நுட்ப அறிவை மக்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

சீனாவிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி

சீனாவில் இருந்து முதல் முறையாக பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ சீன வெங்காயத்தின் மொத்த விலை சுமார் 320 ரூபாவாகும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவும், பாகிஸ்தானும் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததை அடுத்து, இவ்வாறு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ரயிலில் மோதி இளைஞன் பலி

கண்டியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதி, பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபாலமவிற்கு அருகிலுள்ள ரயில் பாதையிலேயே நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன், 24 வயதுடைய தல்பிட்டிய வடக்கு, வாத்துவ பிரதேவத்தில் வசித்தவர்.

புத்தாண்டுக்கு முன் அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை(Aswesuma Welfare Allowance) வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் கடலில் குதித்த பெண் - விரைந்து காப்பாற்றிய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர்

காலி முகத்திடலில் கொடிக்கம்பத்திற்கு அருகில் நின்ற பெண் ஒருவர், திடீரென கடலில் குதித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள், பொலிஸ் ஆய்வாளர் ஏ.எச்.பி.எஸ். அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் குறித்த பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளனர். அத்துடன், மேலதிக சிகிச்சைக்காக குறித்த பெண்ணை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இன்று அதிகமான மின்னல் தாக்கங்கள் காணப்படலாம்

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

தமிழ் பொதுவேட்பாளர் யோசனை - நிராகரித்தார் சம்பந்தன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற யோசனையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. அடியோடு நிராகரித்துள்ளார். இந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கான சாதகமான நிலைமைகளை உருவாக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

நெருக்கடியைத் தீர்க்க மிகப் பொருத்தமான தலைவர் ரணில்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் உறுதிப்படுத்துவதாகவும், எனவே எதிர்காலத்தில் அவரது தலைமை நாட்டுக்குத் தேவை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வைத்து நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளலாம் எனவும் கூறியுள்ளார்.

மைத்திரியின் வாக்குமூலம் - சீனாவால் கோபமடைந்த நாடு எது?

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்தியது யார் என்ற தகவலை இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அடையாளம் தெரியாத நபரே தன்னிடம் கூறினார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சி.ஐ.டியிடம் கூறியுள்ளார் என அறிய முடிவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.