மைத்திரியிடம் தகவல் சொன்ன மர்ம நபரைத் தேடும் சி.ஐ.டி.: இலங்கையின் முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

OruvanOruvan

Short News 01.04.2023

மைத்திரியிடம் தகவல் சொன்ன மர்ம நபரைத் தேடும் சி.ஐ.டி.

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யாரென்ற தகவலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறிய அந்த மர்ம நபரைச் சி.ஐ.டியினர் இப்போது தேடத் தொடங்கியுள்ளனர். வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே இந்தத் தகவலை அவர் கூறினார்
என்று மைத்திரி, சி.ஐ.டியினரிடம் கூறியிருந்தார். சி.ஐ.டியினர் இப்போது அந்த நிகழ்வு இடம்பெற்ற இடத்தின் சி.சி.ரி.வி. வீடியோக்களைச் சோதித்துள்ளனர்.

OruvanOruvan

ஏழு நாடுகளுக்கான இலவச விசா திட்டத்தை நீடித்த இலங்கை

ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச விசா திட்டத்தை எதிர்வரும் 30ஆம் திகதிவரை அரசாங்கம் நீடித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கே இந்த சலுகை வழங்கப்பட்டது.

OruvanOruvan

கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட கலால் அதிகாரிகள்

கேரள கஞ்சாவுடன் நான்கு கலால் அதிகாரிகள் உட்பட 08 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சுமார் 45 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை மீளாய்வு செய்ய சுயாதீன ஊதியக்குழு நியமனம்

அரசாங்க நிதிக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய, இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை மீளாய்வு செய்வதற்காக சுயாதீன ஊதியக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு இல்லாத வகையில் நியாயமான தீர்வு காண இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 10 வைத்தியசாலைகள் அடையாள வேலைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் இலங்கை தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட 10 வைத்தியசாலைகள் நாளை செவ்வாய்க்கிழமை அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வசந்தகால கொண்டாட்டம் நுவரெலியாவில் ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான வசந்த கால நிகழ்வுகள் இன்று (01) காலை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக, ஆரம்பித்து வைக்கப்பட்டன. இன்று ஆரம்பமாகியுள்ள இந்த நிகழ்வுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

துமிந்த, லசந்த, மஹிந்த அமரவீர பதவி நீக்கம் - நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு

துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு பதவிகளிலிருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டாலும் பேருந்து கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.

சுப்பர் டீசலின் விலை குறைவினால் மாத்திரம் பேருந்து கட்டணத்தை குறைக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சர்வதேச அளவில் வெசாக் தினத்தை கொண்டாட தீர்மானம்

உலகளாவிய அமைதி, கலாச்சார மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்தல் ஆகியவற்றின் யுனெஸ்கோவின் முக்கிய கட்டளைக்கு இணங்க, யுனெஸ்கோ அதன் 219 வது அமர்வில் சர்வதேச அளவில் வெசாக் தினத்தை கொண்டாட தீர்மானித்துள்ளது.

பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை

கட்டுகெந்த - தங்கொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

செருபிட்டிய தமனவெல பகுதியைச் சேர்ந்த 74 வயதான நபரொருவர், தீயில் சிக்கி எரிந்து உயிரிழந்துள்ளார். வைக்கோலுக்கு தீ வைக்க போவதாக கூறிவிட்டு, வயலுக்கு சென்றவரே இவ்வாறு தீப்பற்றி உயிரிழந்துள்ளார்.

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஒரு டொலரின் கொள்வனவு விலை 295.57 ரூபாவாகவும், விற்பனை விலை 305.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 180,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கத்தின் 1 கிராமின் விலை 22,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன், 22 கரட் தங்கப்பவுண் ஒன்றின் விலை 166,500 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கத்தின் 1 கிராமின் விலை 20,812 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அநுராதபுர ஜேதவனராமய விகாரையில் விரிசல்

அநுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஜேதவனராமயவில் ஏற்பட்டுள்ள விரிசல்களை பார்வையிடுவதற்காக விசேட குழுவொன்று நாளை அனுராதபுரத்திற்கு செல்லவுள்ளது. கலாசார அலுவல்கள் அமைச்சின் மத்திய கலாசார நிதியம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று இதில் இணையவுள்ளது.

கடவுச்சீட்டு வழக்கிலிருந்து விடுதலையானார் விமல் வீரவன்ச

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் மாதமும் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமாட்டது

ஏப்ரல் மாதமும் உள்நாட்டு எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வடைந்துள்ளதன் அனுகூலத்தை மக்களுக்கு வழங்க முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை அறிவிக்கப்படும் எனவும் முதித பீரிஸ் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு

சிங்கப்புர பிரதேசத்தில் பரகஹதெனியவிலிருந்து புஸல்லாவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், 14 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த ஏனையோர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

100 ரூபாவினால் குறைவடையும் கேக்கின் விலை

முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்படுமாயின், ஒரு கிலோகிராம் கேக்கின் விலையை 100 ரூபாவினால் குறைக்க முடியும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில்

அனைத்து தாதியர்களும் மூன்று மணித்தியாலங்கள் கடமையிலிருந்து விலகி இன்று மற்றும் நாளை தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது. தாதியர் கொடுப்பனவு, சீருடை கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி இந்த தெழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹடவல தெரிவித்துள்ளார்.


ஆயுர்வேத சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு

பாராளுமன்றத்தை இன்றும் நாளையும் கூடவுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை, மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை 2024.03.19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆயுர்வேத சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 'குயின் மேரி டூ' சொகுசு கப்பல்

2,290 பயணிகள் மற்றும் 1,218 பணியாளர்களுடன் 'குயின் மேரி டூ' என்ற சொகுசு பயணிகள் கப்பல் தாய்லாந்தில் இருந்து இன்று (31) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பிரித்தானியா, கிழக்கு ஆபிரிக்காவின் மொரிஷியஸுக்கு இன்று இரவு கப்பல் புறப்படவுள்ளது.

பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

மேற்கு, தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.