கச்சத்தீவு பிரச்சினை 1974இல் முடிந்துவிட்டது: மோடிக்கு காங்கிரஸ் பதில்

OruvanOruvan

பிறா் உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி இலங்கைக்கு தாரைவாா்த்தது என பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிட்ட கருத்து இந்தியாவில் பூதாகரமாக மாறியுள்ளது.

கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது என்பது மக்கள் மனதில் மீண்டும் உறுதியாகியுள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களைப் பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் பணியாக உள்ளது. அது தொடா்ந்து நீடிக்கிறது என்றாா்.

பிரதமரின் பதிவைத் தொடர்ந்து கச்சத்தீவு விவகாரம் பூதகரமாக சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

அதில், ”நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன். கச்சத்தீவு பிரச்சினை எப்படி உருவானது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்.

1974ஆம் ஆண்டு கடல் எல்லையை எங்கே வைப்பது எனறு இந்தியா - இலங்கை இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது, அப்போது, வரையப்பட்ட எல்லையின்படி, கச்சத்தீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டது.

கச்சத்தீவை விட்டுக் கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை என ஜவஹர்லால் நேரு தெரிவித்தார். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் 6180 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் நடவடிக்கையால் தான் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்துப் பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், 1974இல் தீர்க்கப்பட்ட ஒரு பிரச்சினையை பிரதமர் ஏன் இப்போது எழுப்பியுள்ளார்? இந்தப் பிரச்சினை 50 ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கப்பட்டுவிட்டது.

இலட்சக்கணக்கான தமிழர்களுக்கு உதவும் வகையில், 1974இல் இந்திரா காந்தி அரசு இலங்கையுடன் பேச்சுவர்த்தை நடத்தியது. அதனடிப்படையில், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என ஒப்புக்கொள்ளப்பட்டது. பிரதிபலனாக, 6 இலட்சம் தமிழர்கள் இந்தியாவிற்கு வர அனுமதிக்கப்பட்டனர்.

2,000 சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதி, சீனப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் இல்லை எனப் பிரதமர் மோடி கூறி வருகிறார். இந்தியப் பகுதி, சீனப் படைகளால் ஆக்கிரமிக்கப்படவில்லை என்கிறார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றை பற்றிப் பேசாமல், கடந்த 3 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை அவர் பேச வேண்டும். சீன ஆக்கிரமிப்பு வலுக்கட்டாயமாக நடத்தப்பட்டுள்ளது.இது குறித்துப் பேசுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.