காஸா சிறுவர் நிதியத்திற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை: ஜனாதிபதியால் உத்தியோகப்பூர்வமாக கையளிப்பு

OruvanOruvan

GOSL Contributes One Million USD to Gaza Children’s Fund

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் காசாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (01) காலை நடைபெற்றது.

இதற்கான காசோலை ஜனாதிபதியால் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹேர் ஹம்தல்லாஹ் ஸைதிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய காஸாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு முன்னதாகவே நன்கொடையாளர்கள் நிதியுதவியளிக்கப்பட்டது.

அத்துடன், இவ்வருடம் இப்தார் நிகழ்வுகளை நடாத்துவதற்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட நிதியை குறித்த சிறுவர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கமைய,முதற்கட்டமாக காஸா சிறுவர் நிதியத்திற்காக வழங்கப்பட்ட ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பலஸ்தீன அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

அத்துடன், “காஸா சிறுவர் நிதியத்திற்கு” 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் பலஸ்தீன அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நன்கொடையாளர்களுக்கு நிதியத்திற்கு பங்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பங்களிக்க விரும்புவோர் தமது நன்கொடைகளை இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையின் 7040016 எனும் கணக்கு இலக்கத்தில் வைப்பிலிட முடியும்.

அதற்கான பற்றுச் சீட்டை 077-9730396 எனும் எண்ணுக்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்புமாறு ஜனாதிபதி அலுவலகம் கோரியுள்ளது.