வித்தியா கொலை வழக்கின் குற்றவாளி திடீரென உயிரிழப்பு: கண்டி வைத்தியசாலையில் சடலம்

OruvanOruvan

யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

37 வயதான பூபாலசிங்கம் தவக்குமார் என்பவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அவர் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியா படுகொலையின் பின்னணி

கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி புங்குடுதீவு பிரதேசத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற உயர்தர வகுப்பு மாணவி தன் வீட்டிலிருந்து காலை பாடசாலை செல்லும்போது கடத்திச் செல்லப்பட்டார்.

பின்னர் அவர் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த குற்றச் சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளினூடாக பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் தவக்குமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார் ஆகிய சகோதரர்கள் மூவரும் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளினூடாக மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், பழனிரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன் ஆகிய ஐவரும் 2015ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இது குறித்த வழக்கானது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டது.

அரச தரப்பு சாட்சியாக மாறிய சுரேஷ்கரன்

இந்த வழக்கை பரிசீலித்த சட்டமா அதிபர் திணைக்களம், வழக்கின் 12 சந்தேக நபர்களில் 11 வது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ்கரன் சட்டமா அதிபரினால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்டார்.

அத்துடன் 10 ஆம் மற்றும் 12 ஆம் சந்தேக நபர்கள் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

இதன் பின்னர் இவ்வழக்கின் ஏனைய ஒன்பது சந்தேக நபர்களுக்கும் எதிராக ஆட்கடத்தல், சதித்திட்டம் தீட்டியமை, பாலியல் துஸ்பிரயோகம், கொலை உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பகிர்வுப் பத்திரமானது சட்டமா அதிபரால் தயார் செய்யப்பட்டது.

அத்துடன் பிரதம நீதியரசரால் இவ்வழக்கை விசாரணை செய்ய நீதாய விசாரணை மன்று உருவாக்கப்பட்டது.

இதற்கு நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையில், அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய இரண்டு மேல்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட அனைத்து விசாரணைகளும் முடிவுறுத்தப்பட்டு சுவிஸ்குமார் என அறியப்படும் மாகாலிங்கம் சசிக்குமார் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.