மே தினத்தோடு தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பம்: வியூகம் வகுக்கும் கட்சிகள்

OruvanOruvan

மே தினக் கூட்டத்தோடு தேர்தல் பிரசார நடவடிக்கையை முழுவீச்சுடன் முன்னெடுப்பதற்கு தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன தற்போது தொகுதி கூட்டங்களையும், மகளிர், இளைஞர் மாநாடுகளையும் நடத்தி வருகின்றன.

விமல் வீரவன்ச அணி, நிமல் லான்சா அணி என்பனவும் மக்கள் சந்திப்புக்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், மே தினக் கூட்டத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்திப் பலத்தைக் காட்டுவதற்கும் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அடுத்து என்ன தேர்தல் என்பது தொடர்பான அறிவிப்பு தமிழ், சிங்கள புத்தாண்டு முடிந்த பின்னர் அதிகாரபூர்வமாக வெளியாகும் எனத் தெரியவருகின்றது.

முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படவுள்ளது . இதற்கான முடிவை ஜனாதிபதி எடுத்துவிட்டார் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

எனவே, மே தினக் கூட்டத்தைப் பிரமாண்டமாக நடத்தி, அன்று முதல் தேர்தல் பிரசாரத்தையும் தீவிரப்படுத்த கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தொகுதி அமைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அரசியல் கூட்டணிகளும் அடுத்த மாதம் முதல் மலரவுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி ஏப்ரல் 5 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.