பொருளாதார நெருக்கடி: வெளிநாடுகளுக்குச் சென்று மரணத்தை தேர்ந்தெடுக்கும் இலங்கையர்கள்

OruvanOruvan

பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டு வேலை மோசடிக் கும்பல்களிடம் சிக்கிய ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதன் ஒருபகுதியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துள்ள ரஷ்ய - உக்ரைன் போரில் இலங்கையர்கள் கூலிப் படைகளாக செயற்படும் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

இலங்கையர்களை கூலிப்படையாக அனுப்பும் "சட்டவிரோத தொழில் மையமாக" வெளிநாடு ஒன்று செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு அந்த நாட்டின் பெயரைச் சொல்ல முடியாது என்றும், இருப்பினும், மோசடி செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் “இது ஒரு சட்டவிரோத மோசடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) சில கடத்தல்காரர்களை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டதையடுத்து, இந்த சட்டவிரோத கும்பல் நிறுத்தப்பட்டுள்ளது. சிஐடி முழு விசாரணையைத் தொடங்கியுள்ளது’’ எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ரஷ்ய - உக்ரைன் போரில் ஐந்து இலங்கையர்கள் பலி

ரஷ்ய - உக்ரைன் போரில் குறைந்தது ஐந்து இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான அன்ட்ரூ ரனீஷ் ஹேவகே, லெப்டினன்டாக பணியாற்றிய பின்னர் 2012 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இருந்து விலகியவர்.

இவர் கடந்த டிசம்பரில் ரஷ்யா-உக்ரைன் போரில் ஈடுபட்ட போது கொல்லப்பட்டார்.

ரஷ்யாவுக்காகப் போராடிக்கொண்டிருந்த இலங்கையர் நிபுன சில்வா உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதலில் அண்மையில் உயிரிழந்ததாக அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

அல்-ஜசீராவின் தகவலின்படி, கடந்த சில மாதங்களில் ஐந்து இலங்கையர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர்.

"நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் இப்போது உக்ரைன் மற்றும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் மாதாந்தம் 3,000 அமெரிக்க டொலர்கள் (900,000 இலங்கை ரூபாய்க்கு மேல்) சம்பளம் மற்றும் ரஷ்ய குடியுரிமைக்கான வாய்ப்பு என்பவற்றால் இலங்கையர்கள் போரில் ஈர்க்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் அல்ஜசீராவிடம் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ரஷ்யா-உக்ரைன் போரில் சண்டையிட எவரும் அனுப்பப்படவில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

“இந்த வழியில் செல்வது சட்டவிரோதமானது. எனினும், இதன் காரணமாக இந்த நாடுகளுடன் இராஜதந்திர ரீதியில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. காரணம், அவர்கள் தனி நபர்களாக சென்றுள்ளனர்” என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மரணத்தை தேர்ந்தெடுத்துள்ள இலங்கையர்கள்

இதனிடையே, இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் எவரும் உக்ரைன் - ரஷ்ய போரில் கூலிப்படைகளாக செயற்படவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என்.ரசிக குமார தெரிவித்துள்ளார்.

“இருப்பினும், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்கள் போரில் இணைந்துள்ளார்களா என்பது குறித்து எங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை.

ரஷ்யா - உக்ரைன் போரில் உயிரிழந்த இரண்டு இலங்கையர்களும் இதற்கு முன்னர் சிங்கப்பூர் மற்றும் டுபாயில் பணியாற்றியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக” அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, “ஒரு நாடு தனது போருக்குப் படைவீரர்களை ஆட்சேர்ப்பு செய்தால், அது தூதரகம் மற்றும் நிபந்தனைக்குட்பட்ட சேவை ஒப்பந்தத்தின் மூலம் செய்யப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹநாமஹேவா தெரிவித்துள்ளார்.

பின்னர் இரு தரப்பினருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது மற்றும் பொறுப்புக்கூற முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

“இப்போது, இரண்டுமே இல்லை. இறந்தவர்கள் சார்பில் இழப்பீடு வழங்கப்படுமா? காப்பீடு உள்ளதா? ஒன்றுமே இல்லை. இது மிகவும் தீவிரமான பிரச்சனை” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எங்கள் சக குடிமக்கள் குழு ஒரு கொடூரமான போரில் சண்டையிடச் சென்றுள்ளது. அவர்கள் மரணத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர், இது இலங்கையின் பொருளாதார நெருக்கடி எவ்வளவு கடுமையானது என்பதற்கான சோதனையாகும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுலா விசாவை பயன்படுத்தும் இலங்கையர்கள்

பொருளாதார திவால்நிலைக்கு மத்தியில், இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் வேலை தேடுவதற்கு மக்களை ஊக்குவித்துள்ளது. இந்த தொழிலாளர்கள் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிக்கின்றனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) குறிப்பாக இளைஞர்கள் சிறந்த சம்பளத்திற்காக சட்டவிரோதமான முறையில் வெளியேறுவதற்கு தூண்டப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

இதற்காக பெரும்பாலானோர் சுற்றுலா விசாவைப் பயன்படுத்துகின்றனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கணினி தொழில்நுட்பத் துறையில் வேலைகளுக்காக வருகை விசாவில் வெளியேறி மியன்மாரில் உள்ள இணைய அடிமை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் பற்றிய செய்திகள் வெளியாகின.

அவர்கள் ஒரு பயங்கரவாத குழுவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்களை விடுவிக்க இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு சட்டரீதியாக அனுப்பும் அதிகாரம் பணியகத்திற்கே உள்ளது. ஒரு நபருக்கு அந்த குறிப்பிட்ட நாட்டினால் வழங்கப்பட்ட வேலை விசா இருக்க வேண்டும்.

மேலும் அவர் பணியகத்தில் பதிவு செய்ய வேண்டும். தாதி மற்றும் வீட்டு உதவியாளர் சேவையில் வேலைகளுக்கு, பணியகம் சுருக்கமான வதிவிடப் பயிற்சியை வழங்குகிறது.

எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக எண்ணிக்கையிலான மக்களை வேலைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார முகவர் நிறுவனங்களுக்கு பயிற்சியளிக்க அனுமதித்துள்ளார்.

இது மோசடிகளுக்கு வழியைத் திறந்துவிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சண்டே டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

"இந்த தளர்வான கொள்கைகள் காரணமாக, தங்கள் பதிவை புதுப்பிக்காத முகவர் நிறுவனங்கள் அல்லது சட்டவிரோத பணிகளில் ஈடுபடுபவர்கள் வருகை விசாவைப் பயன்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.

நாங்கள் எப்படி பொறுப்பாக இருக்க முடியும்?

ஆயினும்கூட, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் ஆட்சேர்ப்பு செய்பவர்கள் பதிவு செய்யும் போது, வேலை விசாவின் செல்லுபடியாகும் தன்மை, சம்பந்தப்பட்ட வேலையின் பாதுகாப்பு, அதன் ஆபத்துகள், நியாயமான ஊதியம் வழங்கப்படுவது போன்றவை உறுதிப்படுத்தப்படுகின்றன.

“அரசாங்கக் கொள்கையின்படி, நாங்கள் யாரையும் போரில் ஈடுபடி எந்த நாட்டிற்கும் வேலைக்காக அனுப்புவதில்லை. சர்வதேச விதிமுறைகளின் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைகளாக இலங்கை வீரர்கள் தூதரகங்கள் மூலம் அனுப்பப்படுகின்றனர்.

ரஷ்யா-உக்ரைன் போருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்த வீரர்களையும் அனுப்பவில்லை,” என்று பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் சண்டே டைம்ஸிடம் தெரிவித்தார்.

ரஷ்யா - உக்ரைன் போருக்கான கூலிப்படையினரும், மியன்மாரில் கணினி தொழில்நுட்ப வேலைகளை ஏற்றுக்கொண்ட இலங்கையர்களும் சட்டவிரோதமாக அங்குச் சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வது இரண்டு வழிகளில் நடைபெறுகிறது:

  • சட்டப்பூர்வமாக, வேலை விசாக்களுடன், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மூலமாக

  • சுற்றுலா அல்லது வருகையாளர் விசாவைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுதல்.

“கடந்த சில ஆண்டுகளில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ஏராளமான இளைஞர்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்லத் தொடங்கினர்.

சட்டப்பூர்வ வேலை விசாவைக் கொண்டவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீடு மற்றும் மற்றொரு குழுவுடன், சுற்றுலா விசாவில் நாட்டை விட்டு வெளியேறி, பின்னர் வேலை பெற்றுக்கொண்டுள்ளனர்.

வேறு சிலர் வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் வேலை தேடி, வருகை விசா மூலம் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்,” என அவர் கூறியுள்ளார்.

வருகை விசாவுடன் நாட்டை விட்டு வெளியேறுபவர்களை மோசடி செய்பவர்கள் சுரண்டுகிறார்கள், மேலும் பாதகமான விளைவுகள் ஏற்பட்டால் பொறுப்பு அரசாங்கத்தையே சாரும்.

வருகை விசாவில் பயணிப்பவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதில்லை. "அப்படியானால், நாங்கள் எப்படி பொறுப்பாக இருக்க முடியும்?" என்று பணியக அதிகாரி கேள்வியெழுப்பியுள்ளார்.

"வேலை விசாக்களுடன் வேலைக்குச் செல்லும் பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்கிறார்கள்." இதன் மூலம் வேலை செய்யும் இடங்கள், வெளிநாடுகள் மற்றும் இலங்கையில் உள்ள முகவரிகள் மற்றும் பலவற்றைப் பதிவு செய்ய அனுமதிக்கிறது.

அடிப்படை உரிமையான பயண உரிமையை மீறும் சட்டப்பூர்வ உரிமை பணியகத்திற்கு இல்லை. வருகை விசா பெற்று வேலை தேடிச் செல்வதைத் தடுக்க வழியில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆகவே, வெளிநாடுகளில் வேலைபெற்று பயணிக்கும் முன்னர் இலங்கையர்கள் பணியகத்தில் கட்டணம் செலுத்தி பதிவு செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார்.

இலங்கையர்கள் வருகை விசாக்களுடன் வெளியேறி பின்னர் ஆபத்தான சூழ்நிலைகளில் முடிவடைவதைத் தடுக்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுகின்றது.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாங்கள் செய்வது சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கேள்வி கேட்பதுதான். இது மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டும். காரணம், சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி எந்த நபரும் உலகின் எந்த நாட்டிற்கும் பயணம் செய்ய முடியும்.

அதில் நாம் தலையிட முடியாது. அவர்களிடம் விசாரிக்கும் போது, சில நபர்கள் வேலைக்காக வெளியூர் செல்கிறார்கள் என்ற உண்மை வெளிப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை பெறுவதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லையெனில், நாங்கள் நிச்சயமாக அவர்களை தடுத்து நிறுத்துவோம்” என்று அந்த அதிகாரி கூறினார்.

இதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டில் 1047 பேர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டனர், இது 2023 ஆம் ஆண்டில் 1855 ஆக உயர்ந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில், 99 பேர் குற்றப் புலனாய்வு மற்றும் பொலிஸாரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டனர், 2023 ஆம் ஆண்டில் 233 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கூற்றுப்படி, பனாமா ஒப்பந்தத்தின் அடிப்படையில், மிக உயர்ந்த குற்ற வகைகளில் மூன்றாவது மிகக் கடுமையான குற்ற வகைக்குள் வரும் மனித கடத்தலைத் தடுக்க, பணியகம் மனித கடத்தல் தடுப்புப் பிரிவை இயக்குகிறது.

வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் தொடர்பாக வரும் முறைப்பாடுகளை விசாரிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆதரவுடன் இந்த சட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் எதிர்பாராத பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்கு உதவுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு ஒருவர் உயிரிழப்பு

நூற்றுக்கணக்கான இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் உயிரைக் கொடுக்கிறார்கள்.

2022 ஆம் ஆண்டில் குறைந்தது ஒரு இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளி ஒவ்வொரு நாளும் வெளிநாட்டில் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

389 இயற்கை மரணங்கள், தற்கொலை மூலம் 30 மரணங்கள், மூன்று கொலைகள், சாலை போக்குவரத்து விபத்துகளில் 36 மரணங்கள், 29 பிற விபத்துகள் மற்றும் 20 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இத்தகைய தரவுகள் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவலங்களை பிரதிபலிக்கின்றது.

பல உயிரிழப்புகள் பதிவாகாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்கள் சிலர் ஆவணமற்ற தொழிலாளர்கள், அவர்களின் இறுதி சடங்குகளுக்கு நிதி திரட்டப்பட்டு நெருங்கிய நண்பர்களால் அல்லது புலம்பெயர்ந்த தொழிலாளர் குழுக்களால் செய்யப்படுகின்றன.

2022 ஆம் ஆண்டில், இலங்கையர்களின் பெரும்பாலான மரணங்கள் சவுதி அரேபியாவில் இருந்து பதிவாகியுள்ளன. 146 மரணங்கள் அங்கிருந்து பதிவாகியுள்ளது.

அவர்களில் 107 இலங்கை ஆண்களும் 39 பெண்களும் அடங்குவர். அடுத்தபடியாக குவைத்தில் 108 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 53 ஆண்களும், 55 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

39 ஆண்கள் மற்றும் 21 பெண்கள் என ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 60 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளன். ஜப்பானில் ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நான்கு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் என இஸ்ரேலில் எட்டு பேர் உயிரிழந்துள்ளது்டன், சீனாவில் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் - சண்டே டைம்ஸ்