மது அருந்தும் போட்டி: மூன்றுப் பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு

OruvanOruvan

அதிக மது அருந்தியவரை தெரிவு செய்வதற்கான போட்டியின் போது அதிக மது அருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெடண்டி தோட்டத்தின் மார்ல்பரோ பிரிவில் வசிக்கும் 39 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி இரவு குறித்த தோட்டத்தில் கோவிலில் வருடாந்திர தேர் திருவிழா இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்ட இளைஞர்கள் குழு அதிக அளவில் மது அருந்துபவர்களை தேர்வு செய்யும் போட்டியை நடத்தினர்.

அதே தோட்டத்தில் வசிக்கும் 3 பேர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டதுடன், அவர்களுக்கு 3,750 மில்லி லீட்டர் அளவு மதுபானம் வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த நேரத்தில் மதுபானத்தை குடிப்பவரை வெற்றியாளராக தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், போட்டியில் பங்குகெடுத்தவர்கள் போட்டிக்கு முன்னதாகவே அதிகளவில் மது அருந்தியிருந்ததாக அங்குள்ள பொது மக்கள் தெரிவித்தனர்.

மரணம் குறித்த விசாரணையின் போது தனது தந்தை இரவு வீட்டிற்கு வந்து இரவு உணவு சாப்பிட்ட பின்னர் உறங்கியதாகவும், உறக்கத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் மூத்த மகள் தெரிவித்துள்ளார்.

இப்போட்டியில் கலந்துகொண்ட மற்றுமொருவர் மிகவும் சுகவீனமடைந்து திக் ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தையின் பிரேதப் பரிசோதனையை திக் ஓயா ஆதார வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர் ஒருவரால் நடத்தப்பட்டது.

காய்ச்சலினால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் கழுத்து நரம்பில் உணவு சிக்கியமையே மரணத்திற்கான காரணம் என அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.