ஜனாதிபதி தேர்தலுக்கான அடிப்படை ஏற்பாடுகள் பூர்த்தி: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

OruvanOruvan

Election commission

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தலை இவ்வருட நடுப்பகுதியில் நடத்துவதற்கு ஆணைக்குழு தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேவையென்றால் மேலும் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஆணைக்குழு மூலம் தேவையான எழுதுபொருள்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ள போதிலும், அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், ஜூன் மாதத்திற்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பில் சிக்கல்கள் ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.