பல் வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி உயிரிழப்பு: இலங்கையின் முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

OruvanOruvan

Short Story 31.03.2024

பல் வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி உயிரிழப்பு

மொறவக்க - பரகல பகுதியைச்சேர்ந்த 29 வயதுடைய யுவதியொருவர் பல் வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி ஒரு வருடத்திற்கும் மேலாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாட்டின் ஏற்றுமதித் துறையில் வளர்ச்சி

நாட்டின் ஏற்றுமதித் துறையானது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் இந்த வருடம் பெப்ரவரி மாதம் வரை 7.9 வீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் ஆடைத் துறையும் 10.8 வீத வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொரலஸ்கமுவயில் உடற்பிடிப்பு நிலையத்திற்கு சென்ற நபர் உயிரிழப்பு

கொழும்பு பொரலஸ்கமுவ பகுதியில் உடற்பிடிப்பு நிலையத்திற்கு சென்ற நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனமடைந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய வரி அறிமுகம்

விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.விசேட பண்டங்கள் வரி அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இரத்து செய்யப்பட்டதையடுத்து புதிய வரி அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளுர் முட்டை விலையில் மாற்றம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் உள்ளுர் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைவடையும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும்

அரசாங்கம் வரிச்சலுகை வழங்கினால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

கிணற்றில் விழுந்து ஆண் குழந்தை பலி

பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு வயது ஆண் குழந்தையொன்று கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

சீன பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிரதமர்

சீனாவுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன நாடு திரும்பியுள்ளார். பிரதமர் விஜயத்தின் போது சீன ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்த விஜயத்தின் போது சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதுடன், இலங்கைக்கான சீனாவின் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நச்சுப்புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு அபராதம்

மோட்டார் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாருக்கு நச்சுப்புகையை வெளியேற்றும் வாகனங்களை சோதனை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திறன் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நச்சு கறுப்புப்புகையை வெளியிடும் அரச வாகனங்கள் உட்பட்ட வாகனங்களுக்கு 2000 - 5000 ரூபாவிற்கு குறையாமல் அபராதம் விதிக்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊசி மருந்து செலுத்தப்பட்ட நோயாளி மரணம்; விசாரணைகளை ஆரம்பித்த சுகாதார அமைச்சு

ராகம போதனா வைத்தியசாலையில் ஊசி மருந்து செலுத்தப்பட்ட பின்னர் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 50 வயதுடைய குறித்த நோயாளி தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொண்ட சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்திலிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ராகமை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்தார்.

எரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலை சூத்திரத்திரத்திற்கமைய இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கோழி இறைச்சியின் விலை உயர்வு

ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை இன்று (31) முதல் அமுலுக்கு வரும் வகையில் 45 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1255 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. இதேவேளை, ஒரு கிலோ ஆட்டிறைச்சி 3300 ரூபாவிற்கும், ஒரு கிலோ மாட்டிறைச்சி 2400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல்; தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக பொது வேட்பாளரை களமிறக்கும் முடிவை தான் ஆதரிக்கவில்லை என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்கள் கடந்தும் நீதி கிட்டவில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஐந்து வருடங்கள் கடந்துள்ளபோதும் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள பல குழுக்கள் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட போதிலும் இதுவரை உண்மை கண்டறியப்படாமை குறித்து மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ கவலை வெளியிட்டுள்ளார்.

தேங்காய்ப்பால் ஏற்றுமதி - மார்ச் மாத வருமானம் 2971 மில்லியன் ரூபாவாக பதிவு

மத்திய வங்கியின் மாதாந்த அடிப்படையில் வெளியிடப்பட்ட ஏற்றுமதி அறிக்கையின்படி, 2024 பெப்ரவரி மாதத்தில் 6739 மெற்றிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வருமானம் 2971 மில்லியன் ரூபா என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இன்று மழை பெய்யும் சாத்தியம் - வானிலை அவதான நிலையம்

மேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

OruvanOruvan

டெல்லியில் இந்திய வெளியுறவு செயலாளர் சாகாலா இடையே பேச்சுவார்த்தை

இந்திய – இலங்கை இடையிலான இருதரப்புப் பொருளாதார திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான சந்திப்பொன்று நேற்று (28) புதுடில்லியில் நடைபெற்றது.

இந்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ராவின் (Vinay Kwatra) அழைப்பின் பேரில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட இலங்கையின் உயர்மட்டக் குழுவின் பங்கேற்புடன் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.