தேசிய மக்கள் சக்திக்கு சாதகமாக அமையும் ஜனாதிபதி தேர்தல் களம்: கருத்து கணிப்பில் அனுர தொடர்ந்தும் முன்னிலை

OruvanOruvan

Anura Kumara Dissanayake

தேசிய மக்கள் சக்தி மீதான மக்களின் விருப்பு தொடர்ந்தும் அதிகரித்து வருவதனை கருத்து கணிப்புகள் ஊடாக அறிய முடிகின்றது.

சுகாதாரக் கொள்கைகளுக்கான நிறுவனம் (IHP) இலங்கையில் முன்னெடுத்து வரும் கருத்து கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவருகிறது.

ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கருத்துக்கணிப்பு நடவடிக்கையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதம் பாரியளவு மாற்றங்கள் எதுவும் கண்டறியப்படாமலே தொடர்கின்றது.

OruvanOruvan

இதன்படி, 53 வீத அங்கீகாரத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றார்.

தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 34 வீத மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு 6 வீதமும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 7 வீதமும் மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 16,248 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் தரவுகளை பயன்படுத்தி இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பெரும்பாலான மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை தெரிவு செய்வதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.

இருப்பினும், இந்த நிலைப்பாடு இறுதி நொடியில் மாறுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன என்பதே அரசியல் அவதானிகள் கணிப்பாகும்.