மரணவீட்டில் கைகலப்பு : ஐந்து பேர் படுகாயம்: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்....

OruvanOruvan

30.03.2024 North and East News

மரணவீட்டில் கைகலப்பு : ஐந்து பேர் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் மத்தி கிராமத்தில் மரணவீடு ஒன்றின் இறுதி நிகழ்வின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைலப்பாக மாறியதில் 5 பேர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தமிழக முதல்வரை சந்திப்பதற்காக கடற்றொழில் அமைச்சுக்கு அழைப்பு

மீனவ பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக தமிழ் தரப்பிலிருந்து தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தமிழக முதலமைச்சரை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்த பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு அஞ்சலி

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரனுக்கு அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் மாஞ்சோலை வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன

கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் ஈரோஸ்க்கு அல்லது எனது பத்து உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கிகள் தருவீர்களானால் கிழக்கு மாகாணத்தினை தூய்மைப்படுத்தி தருவேன் எனவும் ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்துள்ளார். கிழக்கில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பிள்ளையான் குழு ஆகியவற்றிடம் உள்ள ஆயுதங்களை என்னால் களையமுடியும் எனவும் கல்லடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நீதி கோரி போராட்டம்

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்றையதினம் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 10.00மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, குற்றமிழைத்த நாட்டில் எமக்கான நீதி கிடைக்கப்பெறாது. இதனால் சர்வதேச விசாரணையே எமக்கு தேவை, 12 ஆணைக்குழுக்கள் அமைத்தும் பயன் இல்லை என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களை எழுப்பியிருந்தனர்.

முல்லைத்தீவில் பைப்லைன் மூலமாக கசிப்பு உற்பத்தி

முல்லைத்தீவு - முள்ளியவளையில் காணப்படக்கூடிய வீட்டு காணி ஒன்றில் பைப்லைன் மூலமாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து , விநியோகத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது செய்யட்டுள்ளார்.

திருகோணமலையில் கோடாரியால் தாக்கப்பட்ட பெண் மரணம்

திருகோணமலை - அக்போபுர பகுதியில் நபரொருவர், மது போதையில் கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியதில் 44 வயதுடைய சிரோமாலா பெர்ணாந்து (மனைவி) உயிரிழந்துள்ளதுடன் கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேக நபரான ஏ.டபிள்யூ.எம்.விக்ரமசிங்க என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வடக்கு - கிழக்கு தமிழர்களின் வாக்குகள் ரணிலுக்கே

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைக்கும். 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விட்ட வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் மீண்டும் ஒரு தடவை விடமாட்டார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

இளவாலை - வசந்தபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 47 வயதுடைய ஐயங்கன் சிவானந்தராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதிக மதுபாவனை காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உடற்கூற்று பரிசோதனைளில் தெரியவந்துள்ளது.

கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட தீப்பந்த போராட்டம்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக பிரச்சினைக்கு எதிராக முன்னெடத்து வரம் போராட்டம் நேற்றைய தினமும் ஐந்தாவது நாளாக இடம்பெற்றது. இதன்போது பெிரதேச மக்களினால் தீப்பந்தம் ஏற்றப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மன்னாகண்டலில் மணல் வியாபாரி கைது

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் அனுமதியற்ற முறையில் 22 மிசில் லோட் மணல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

யாழில் ஆண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்

யாழ்ப்பாணத்தில் உள்ள கொழும்புத் துறைப் பகுதியில் ஆண் ஒருவர் குளிப்பதை தொலைபேசியில் மறைந்திருந்து காணொளி எடுத்துக் கொண்டிருந்த ஒருவரை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.சந்தேக நபரின் தொலைபேசியை ஆராய்ந்த போது ஏராளமான ஆண், பெண்களின் குளியல் காட்சிகள் காணப்பட்டதாக தெரியவருகின்றது.

கொக்குளாயில் படகு இயந்திரங்களை திருட்டு

முல்லைத்தீவு கொக்குளாய் புளியமுனைப்பகுதியில் கடற்தொழில் செய்துவரும் கடற்தொழிலாளர்களின் இரண்டு படகுகளின் வெளியிணைப்பு இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலா 9 இலட்சம் பெறுமதியான படகுவெளியிணைப்பு இயந்திரங்களே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.