கொடூரமாகும் மத்திய கிழக்கு வீட்டுப் பணிப்பெண் பணி: மரணம் தொடர்பான காணொளி பரவல்

OruvanOruvan

Domestic violone

மத்திய கிழக்கிற்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. வன்முறைகள் உச்சமடைந்து மரணத்தில் முடிந்த சோகமான கதைகளும் உள்ளன.

குடும்ப வறுமை காரணமாக மத்திய கிழக்கிற்கு வீட்டு வேலைக்காகப் போகும் பெண்கள் பாலியல் ரீதியாகவும் சுரண்டப்படுகின்றார்கள்.

வீட்டு எஜமான்களினால் பாலியல் தேவைக்கும் சில பெண்கள் அச்சுறுத்தி பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.

இதேவேளை வீட்டுப் பணிப்பெண்களை, வீட்டின் உரிமையாளர்கள் அதாவது பெண்கள் ஓய்வின்றி வேலை வாங்குவதும், உணவு, தூக்கத்திற்கு கூட உரிய நேரம் வழங்கப்படாத அவல நிலைகளையும் பல பெண்கள் அனுபவித்து இருக்கிறார்கள்.

இதேவேளை தாக்குதல், தீ சூடு, அடிதடி என உடல் ரீதியாக வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன. வேலைக்கு ஏற்ற சம்பளம் கொடுக்காமை என அவல கதை இன்றும் ஆங்காங்கே தொடரும் கதையாகவுள்ளது.

பெண்களுக்கும் மனித உயிர்களே

குவைட் நாட்டில் இத்தகைய ஒரு அதிர்ச்சி சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.இலங்கையிலிருந்து பணிப் பெண்ணாக ஒருவர் வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். அவர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

அதாவது குறித்த பெண்ணுக்கும் நேபாள் நாட்டைச் சேர்ந்த ஆணுக்கும் இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டிருக்கின்றது.இதன் விளைவினால் அவர்கள் இனம்தெரியாத நபர்களினால் அடித்து கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல் காரணமாக குற்றுயிரும் குலையுமாக இருந்த பெண் பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது.

இத்தகைய சம்பவத்தினால் குவைட்டில் உள்ள இலங்கையர்கள் பலர் அச்சம் அடைந்துள்ளனர்.இந்த தாக்குதலை வெறுமனே கொலையாக மட்டும் கருதிவிட்டுவிட முடியாது. காதல் தொடர்பு என்பது தனிப்பட்டவர்கள் விடயம் இதில் தலையிட்டு அவர்களை கொல்லும் அளவிற்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பில் குவைட் நாடு எடுத்துள்ள சட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இதுவரை வெளியாகவில்லை இருந்த போதிலும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.

பெண்களும் அவதானமாக இருக்க வேண்டும்

வீட்டு வேலை உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய கிழக்கிற்குச் செல்லும் பெண்கள், ஆண்களுடன் தேவையற்ற தொடர்புகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். குவைட், டுபாய் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பெண்களில் சிலர் வெளியில் அறைகள் எடுத்து பழக்கமான ஆண்களுடன் தங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பெண்களுக்கே ஆபத்தானது. சமூக வலைத்தளங்கள் ஊடாக கிடைக்கும் நபர்களை நம்பி தம்மை சில பெண்கள் இழப்பதாகவும் வேதனை வெளியிடப்படுகின்றது. நாட்டில் பிள்ளைகள், பெற்றோர்,

கணவனை விட்டு வேலைக்காகச் செல்லும் பெண்கள் தமது நிலையினை உணர்ந்து கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவுள்ளது.

ஒரு சில பெண்களின் செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த பெண்களையும் குறைகூறிவிட முடியாது ஆனாலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.

பணிப்பெண்கள் தொடர்பில் இலங்கையில் பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.நடைமுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன.இருந்த போதிலும் சில சம்பவங்கள் தவிர்க்க முடியாது நடந்து விடுகின்றது.

பெண்களும் இவை தொடர்பில் அவதானமாக எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அவர்களுக்கு எதிரான வன்முறையை தவிர்த்துக் கொள்ளலாம்.

ஒரு பெண்ணின் மரணம் என்பது வெறும் மரணமல்ல அது ஒரு மகளின் மரணம், ஒரு தாயின் மரணம், ஒரு சகோதரியின் மரணம். ஒரு மனைவியின் மரணம்.

ஆகவே பெண்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் குடும்ப வாழ்விற்கும் முதுகெலும்பாக இருக்கிறார்கள். இவர்களின் பாதுகாப்பு தொடர்பில் சர்வதேசமும் கூடுதல் கருசனை செலுத்துவது காலத்தின் தேவையாகும்.