மக்களுடனான சந்திப்பை தவிர்த்து விமானத்தில் பறந்த இராணுவத் தளபதி: காணி உரிமையாளர்கள் ஏமாற்றம்
தமிழர்களின் தனியார் காணிகளை ஆக்கிரமித்து வன்னியில் பாதுகாப்பு படைத் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த காணியில் பாதியை விடுவிக்கக் கோரி இராணுவத் தளபதியுடன் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வன்னி கட்டளைத் தலைமையகத்திற்குச் சென்ற இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே காணி உரிமையாளர்களைச் சந்திக்காமல் வெளியேறியதை அடுத்து, இராணுவக் கட்டளைத் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ள காணியை விடுவிக்க முடியாது என ஏனைய இராணுவ அதிகாரிகள் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.
தனது பூர்வீகக் காணிக்கு மாற்றுக் காணி வழங்கும் முன்மொழிவை நிராகரித்த தமிழ்த் தாய் ஒருவர், இராணுவ அதிகாரிகளின் கருத்து தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
“கட்டளை பணியகம் என்பது மக்களின் பாதுகாப்புக் கருதி முல்லைத்தீவில் இருக்க வேண்டுமாம். என்பதை விளக்கும் படங்களையும் வரைபடங்களையும் காட்டுகிறார்கள். இந்த கட்டளை பணியகத்தின் நடுவில் வைத்து இரண்டு பக்கங்களிலும் பாதுகாப்பான காணியை வழங்குவதாகவும் இரண்டு ஏக்கர் உரிமையாளர்களுக்கு இரண்டு ஏக்கர் தந்து, அதற்குள் வீட்டுத் திட்டம் அமைப்பதாகவும், அங்கு கூரப்பட்டது. இது முற்றிலும் ஏமாற்றம்தான்.”
மார்ச் 27ஆம் திகதி இராணுவத் தளபதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து காணி உரிமையாளர்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தயாரானார்கள்.
5 காணி உரிமையாளர்கள் இராணுவத் தளபதியை சந்தித்து காணி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பிற்பகல் மூன்று மணியளவில் சந்தர்ப்பம் வழங்கப்படும் என தலைமையகத்தின் இராணுவ அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து தமிழர்கள் தமது போராட்டத்தை கைவிட்டனர்.
அன்றைய தினம் காணி உரிமையாளர்களுடன் இராணுவத் தளபதி பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும், பிற்பகல் ஐந்து மணியளவில் அவர் விமானம் மூலம் அங்கிருந்து வெளியேறியதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பின்னர், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் பலர் இரவு 7.45 மணியளவில் போராட்டத்திற்கு வந்த ஐந்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, தலைமையகத்தை முல்லைத்தீவில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
அந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்த தமிழ்த் தாய், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் இருபுறமும் காணப்படும் தமது பாரம்பரிய காணிக்குப் பதிலாக மாற்றுக் காணிகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் மாற்றுக் காணிகளைப் பெற்றுக்கொள்ள தாம் தயாரில்லை எனவும் வலியுறுத்தினார்.
"இவர்கள் வசிக்கும் குடியிருப்புக் காணி கேள்விக்குரிய நிலையில் உள்ளது. அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மாற்றுக் காணி வாங்குவதாக இருந்தால் முன்னதாகவே வாங்கியிருக்க வேண்டும். மாற்றுக் காணியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை."
கேப்பாபுலவுவில் மாத்திரம் 62 தமிழ் குடும்பங்களுக்கு சொந்தமான 171 ஏக்கர் காணி இராணுவ முகாமுக்காக பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு முன்பாக காணி உரிமையாளர்கள் மேற்கொண்ட தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு
பதிலளிக்கும் வகையில், இரண்டு கட்டங்களாக காணியை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்திருந்து.
ஆனால், மத வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது மண்டபங்கள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ள காணிகளை ஆக்கிரமித்து இராணுவம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை நிர்மாணித்துள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
தமது விவசாய நிலங்களையும் தமிழ் மக்களின் வருமானத்தையும் இராணுவம் அபகரித்து வருவதாக குற்றம் சுமத்தும் காணி உரிமையாளர்கள், யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்கள் இன்னும் யுத்த அனாதைகளாகவே வாழ்ந்து வருவதாக வலியுறுத்துகின்றனர்.