சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதிகள்: இலங்கையின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

29.03.2024 Local Short stories

சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதிகள்

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்ததார். திறந்தவெளி சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரு கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த இரு கைதிகளும் அநுராதபுரம் மற்றும் களனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சனத் நிஷாந்தவின் மனைவிக்கு பதவி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபையின் உறுப்பினராக நியமனம்.

ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபா 54 சதமாக பதிவாகியுள்ளதுடன் விற்பனை விலை 305 ரூபா 33 சதமாக பதிவாகியுள்ளது.

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெரிவிக்கப்படுகின்றது. ஞானசார தேரரை பார்வையிடுவதற்கு வருகை தந்த ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர். அவர்கள் இன்று (29) முற்பகல் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாயக்க தெரிவித்துள்ளார்.சிறைச்சாலையின் உணவகத்தில் இருந்து இருவரும் தப்பிச்சென்றுள்ளனர்.இந்நிலையில் குறித்த கைதிகள் தேடும் நடவடிக்கைளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் 50 வீதம் குறைவடைந்த பால் மா பாவனை

இலங்கையின் மாதாந்த பால்மா பாவனை கடந்த மூன்று வருடங்களில் 50 வீதத்திற்கும் மேல் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 7,000 மெட்ரிக் தொன்னாக இருந்த மாதாந்த பால்மா பாவனை தற்போது 3,000 மெட்ரிக் தொன்னாக குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய மின்சார சட்டமூலம் எதிர்வரும் 02 வாரங்களில் வர்த்தமானியில் வெளியீடு

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் எதிர்வரம் இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் ஏப்ரல் இறுதி வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தரம் 6 முதல் தரம் 11 வரையான வகுப்பு மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க கோரிக்கை

பாடசாலைகளில் தரம் 6 முதல் தரம் 11 வரையான வகுப்பு மாணவர்களுக்கு இலவச உணவை
வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.கணேசலிஙகம் எழுதிய கடிதம் எழுதியுள்ளார்.

எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார். 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த தொற்றாளர் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..

விசேட வர்த்தக வரியை நீக்குவதற்கு நடவடிக்கை

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசேட வர்த்தக வரியை நீக்குவதற்கான யோசனையை அமைச்சரவை ஏற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய வரி அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான உதவி ஆசிரிய நியமனம்

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு 2,535 உதவி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் சில வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.மே மாதத்திற்குள் நியமனங்கள் மற்றும் ஆரம்ப பயிற்சிகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன மக்களின் இனப்படுகொலைக்கு எதிராக மௌனப் போராட்டம்

புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு காஸாவிலுள்ள பலஸ்தீன மக்களின் சுதந்திரத்திற்காக கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் உள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு முன்பாக இன்று (29) மௌனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பலஸ்தீன மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கிதுசர எனும் அமைப்பினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் மேலும் 10 சந்தேகநபர்கள் கைது

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் மேலும் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 19 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்கள் அறிக்கையிடும் புதிய அணுகுமுறை அறிமுகம்

இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாசமான காணொளிகளை உடனடியாக நீக்குவதற்கான இணைய வழி முறைமை நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சினோபெக் விருப்பம்

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று தமக்கு அறிவித்ததாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கரையோர மார்க்கத்திலான இரயில் சேவை தாமதம்

கரையோர மார்க்கத்திலான இரயில் சேவையில் இன்று (29) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தாமதம் ஏற்படக்கூடும் என இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி இரயில் நிலையங்களுக்கு இடையில் குழாய் ஒன்றின் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உதவி பொதுச் சுகாதார பரிசோதகர் மீது கொலை முயற்சி

ராகம பிரதேசத்தில் உதவி பொதுச் சுகாதார பரிசோதகர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ள முயற்சித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களது முயற்சி தோல்வியடைந்த நிலையில் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தல்

நாட்டில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை மறுதினமும் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இன்று, புனித வெள்ளியை அனுஸ்டிப்பதுடன் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் தினத்தை கொண்டாட உள்ளனர்.

முட்டையின் விலை அதிகரிக்கப்படமாட்டாது

டிசம்பர்மாதம் வரை முட்டையின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்னஸ்ரீ அழககோன் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தப்பட்ட மாணவர்கள் சிலர் வைத்தியசாலையில்

களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 முதல் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக 11 மாணவர்கள் நேற்று (28) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யும் சாத்தியம்

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன், மேல், தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (29) பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட்- 19 தொற்றாளர்களுக்கு மூளையிலும் பாதிப்பு

கொவிட்- 19 தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு இதயம் மட்டுமன்றி மூளையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் பாதிப்புகளில் தொடங்கி மூளை சுருக்கம் வரை அந்த பாதிப்பு நீடிக்கக்கூடும் எனவும் தெரியவந்துள்ளது.

அனுரவிடம் தமிழர்களுக்கான தீர்வு இல்லை

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

நாடு சீரான பாதையில் செல்கிறது - பிரசன்ன ரணவீர

நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தை இலங்கை பெற்றுள்ளதாகவும் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.

மொட்டுக்கட்சியின் ஒழுக்காற்று சபை தலைவர்களாக இருவர் நியமனம்

மொட்டுக்கட்சியின் ஒழுக்காற்று சபையின் தலைவர்களாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரஸீக் ஷாரூக் மற்றும் டபிள்யூ . தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏழு பேர் கொண்ட ஏனைய உறுப்பினர்களுள் மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியும் சட்டத்தரணியுமான சாமரி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.