அதிகாரத்தை தக்கவைக்க ரணில் வகுக்கும் தந்திரோபயம்: மாறிவரும் தென்னிலங்கை அரசியல் வகிபாகம்

OruvanOruvan

Ranil

ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்கிவரும் நிலையில் அதில் வெற்றிபெறுவதற்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார். தென்னிலங்கையில் கட்சிகள் தமது வேட்பாளரை வெற்றி கொள்ளச் செய்யும் காரியங்களையும் தொடங்கியுள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை தொடங்கியுள்ளது. அதேபோல் மக்கள் விடுதலை முன்னணியும் அதன் தலைவரை களமிறக்கவும் அவரை வெற்றி பெறச்செய்யவும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

பொதுஜனப் பெரமுன கட்சிக்குள் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்சவிற்கு தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த பதவியில் பசில் ராஜபக்ச காணப்பட்டிருந்தார். அதாவது பொதுஜனப் பெரமுன கட்சி சார்பில் பசில் ராஜபக்சவை தேர்தலில் களமிறக்குவதற்கான நடவடிக்கையாக இருக்குமோ என்ற கருத்தும் பேசப்படுகின்றது.

ரணிலின் நகர்வு

ஜனாதிபதி ரணில் வழமையான பாணியில் மிகவும் நாசுக்காக காய்களை நகர்த்தி வருகின்றார். யாழ்ப்பாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகளை விடுவித்து பொது மக்களுக்கு வழங்கியுள்ளார்.

மேலும் சிங்கள மக்களை திருப்திப்படுத்தும் வகையில் அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுவருகின்றன. டொலரின் பெறுமதி குறைவடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடைந்துவரும் நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதாக ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கடந்த 2016ஆம் ஆண்டு இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

இது இஸ்லாமியர் மத்தியில் அதுவும் புனித ரமழான் மாதத்தில் தீர்ப்பு கிடைத்தமையானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்தகைய பின்னணியில் பார்க்கும்போது ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார உத்திகளாக இவற்றை பயன்படுத்த கூடும். மேலும் எதிர்வரும் காலங்களில் ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் தொடர்பான நடவடிக்கைகளும் தீவிரமடைய கூடும்.

வெற்றி வாய்ப்பு

ஆக ஜனாதிபதித் தேர்தலில் அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பு, அரச நிதி கையாடல், அரச ஊடகங்களின் செல்வாக்கு, வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புக்கள் ரணிலுக்கு சாதகமாக அமையப் போகின்றது என்றே கணிக்கப்படுகின்றது.

மேலும் எதிர்க்கட்சியில் உள்ள சில ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மீண்டும் ரணிலுடன் சேரக்கூடிய வாய்ப்புக்களும் பரவலாகவுள்ளது.

இத்தகைய பின்னணிகளை வைத்து ரணில் தமக்கான வாக்கு வேட்டையினை இலகுவில் செய்வார் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு ரிசாட், அசாத் சாலி, ஹக்கீம் போன்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களை இலாவகமாக ரணில் கையாண்டுவிடுவார்.

தமது ஆட்சியில் சகல தரப்பினரும் சமத்துவமாக நடத்தப்பட்டதாக பிரசாரங்களில் தெரிவித்து மக்களை ஈர்க்கக் கூடும்.

மேலும் மக்கள் மத்தியில் தற்போது பொருளாதார ரீதியாக கொஞ்சம் மூச்சுவிடும் தன்மை உள்ளமையினால் ரணிலை ஆதரிக்கும் நிலையும் ஏற்படலாம் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பாகும். \

பா.யூட்