கிராமிய வாக்குகள் யாருக்கு?: மகிந்தவின் கோட்டைக்குள் நுழைந்த சஜித், அனுர

OruvanOruvan

1977 ஆம் ஆண்டுக்கு முன்னர் கிராமிய வாக்குகளை அதிகளவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பெற்றுவந்தது. படித்த மற்றும் நகர்புற மக்களின் ஆதரவு அதிகமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்து.

கிராமிய வாக்குளை கவர்வதற்கு ஜே.ஆர்.ஜயவர்தன பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் வலுவான தலைமைத்துவம் ஐ.தே.கவின் கொள்கைகள் கிராமப்புறங்களுக்கு செல்வதை தடுத்தது.

பிரேமதாச கிராமிய தலைவராக உருவெடுத்தார்

ஜே.ஆர்.ஜெயவர்தன, இந்த முயற்சியில் தோல்வியுற்றிருந்தாலும், அவருக்கு பின்னர் உதயமான ஏழைகளின் தலைவர் என இன்றும் இலங்கையர்களால் வர்ணிக்கப்படும் ரணசிங்க பிரேமதாச அந்த முயற்சியில் வெற்றிக்கண்டார்.

பிரேமதாசவின் பல திட்டங்கள் கிராமிய மக்களையும் சாதாரண மக்களையும் கவரும் வகையில் இருந்தது. அதனால் அதுவரைக்காலம் சிறிமாவின் வசமிருந்த இருந்த கிராமிய மக்களின் ஆதரவு பிரேமதாசவை நோக்கி நகர்ந்தது.

பிரேமதாசவின் வெற்றிகரமான முயற்சிகளான “கம் உடவ“, “உதா கம்மான“ திட்டங்கள் மற்றும் கிராமப்புற அபிவிருத்தித் திட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைந்ததால் பிரேமதாச கிராமிய தலைவராகவும் உருவெடுத்தார்.

மகிந்த தம்பக்கம் மீட்டெடுத்தார்

பிரேமதாசவின் மறைவுக்குப் பின்னர், பின்னர் வந்த தலைவர்கள் ஐ.தே.கவுக்கு இருந்த கிராமிய ஆதரவுத் தளத்தைப் பராமரிக்கத் தவறினர்.

OruvanOruvan

சுதந்திரக் கட்சியின் இருப்பை வலுப்படுத்த சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்சவும் முயற்சிகளை மேற்கொண்டனர். இவர்கள் ஆட்சியில் ஐ.தே.கவை வெறும் நகர்ப்புற கட்சியாக மாத்திரம் மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தினர்.

மகிந்த ராஜபக்ச ஒரு வலிமைமிக்க அரசியல் சக்தியாக வெளிப்பட்டதன் மூலம், பிரேமதாச ஐ.தே.கவுக்காக பெற்றிருந்த கிராமப்புற ஆதரவை ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து மகிந்த தம்பக்கம் மீட்டெடுத்தார்.

கிராமப்புற வாக்காளர்களைத் திரட்டுவதில் அவர் பெற்ற வெற்றி, கிராம அரசியலில் அவரது திறமையைக் குறிக்கும் வகையில் "கேம் பையா" (“Game Baiya”) என்ற பெயரைப் பெற்றிருந்தார்.

மகிந்த, பசிலின் மூலோபாய வழிகாட்டுதல்

சஜித் பிரேமதாச போன்ற தலைவர்கள், ஐ.தே.க. எதிர்கொண்ட சவால்களுக்கு மத்தியிலும், பிணைமுறி ஊழல் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கிராமப்புறத்தில் இழந்த இடத்தை மீண்டும் பெற முயன்றனர்.

2019 ஜனாதிபதித் தேர்தலின் தேர்தல் புள்ளிவிவரங்கள் கிராமப்புற வாக்காளர்களின் நீடித்த செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டியது. இந்த பகுதிகளில் மகிந்த ராஜபக்சவின் தொடர்ச்சியான ஆதிக்கத்தையே பெறுபேறுகள் பிரதிபலித்தன.

குறிப்பாக மகிந்த, பசிலின் மூலோபாய வழிகாட்டுதலுடன் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் கிராமிய பொருளாதார முயற்சிகள் மூலம் கிராமிய மக்களின் ஆதரவை இவர்கள் பெற்றிருந்தனர்.

OruvanOruvan

கோட்டாபய ராஜபக்சவின் உரக் கொள்கை உட்பட கிராமிய மக்களுக்கு நிராணம் கிடைக்காத சில கொள்கைகளால் மகிந்தவின் கிராம ஆதரவு தற்போது கைநழுவி போயுள்ளதாக சில கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

சஜித்துக்கு அதிகரித்துள்ள ஆதரவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கிராமிய மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத ஒருவர். இந்த சவாலுக்கு மத்தியில் ராஜபக்சர்கள், ரணிலுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இதனால் இந்த முறை கிராமிய மக்கள் ஆதரவை யார் பெற போகின்றனர் என்பதே அரசியல் அரங்கில் பேசுபொருளாக உள்ளது.

ரணசிங்க பிரேமதாசவை போல் சஜித்துக்கு ஓரளவு கிராமிய செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதேபோன்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இம்முறை கிராமிய மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், கிராம அபிவிருத்திக்கான தனது தந்தையின் அர்ப்பணிப்பை எதிரொலிக்கும் சஜித் பிரேமதாசவிடம் இன்றைய கிராமவாசிகள் ஒரு புதிய கலங்கரை விளக்கத்தைக் கண்டுள்ளனர் என அக்கட்சியினர் வர்ணிக்கின்றனர்.

தீவிர பிரசார நடவடிக்கைகளை ஆரம்பம்

கிராமங்களுக்கு டிஜிட்டல் வகுப்பறைகளை, பஸ்களை வழங்குதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் கிராமப்புற சமூகங்களுடன் நேரடியான கலந்துரையாடல்களில் ஈடுபடுதல் போன்ற சஜித்தின் சில முன்முயற்சிகள் கிராமவாசிகளுக்கு பிரேமதாசவின் பெயரின் மீதிருந்த நெருக்கத்தை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.

மகிந்தவின் பிடியில் இருந்து கிராமங்களை சஜித்தால் மீட்க முடியுமா? அல்லது அனுர மீட்பாரா என அரசியல் அரங்கில் விவாதமாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவருவதால் பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஏனைய சிறிய கட்சிகளும் கிராமப்புறங்களில் தீவிர பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

(கட்டுரை - சு.நிஷாந்தன்)