இஸ்ரேலில் பணியாற்ற இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்: விவசாய துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்தம்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து கணிசமானோர் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
அத்துடன், அரசாங்கமும் இலங்கை பணியாளர்கள் வெளிநாடுகளில் சென்று பணிபுரிவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது.
அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் பல்வேறு நாடுகள் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளன.
அந்த வகையில், இஸ்ரேலின் விவசாய துறையில் பணியாற்றுவதற்காக 1064 இலங்கையர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் மார்ச் மாதத்தில் மாத்திரம் குறித்த எண்ணிக்கையிலான இலங்கையர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலங்கையர்களுக்கு இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரையான காலப்பகுதியில் 1666 இலங்கையர்கள் இஸ்ரேலின் விவசாய பணிக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், இஸ்ரேலின் தாதியர் துறையில் பணியாற்றுவதற்காக 29 இலங்கையர்களுக்கு நேற்று விமான பயண சீட்டுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.