அனுரவின் கூட்டத்தில் தமிழ் இளைஞன் அரங்கை விட்டு வெளியேற்றப்பட்டாரா?: கனடாவில் என்ன நடந்தது?

OruvanOruvan

Anura Kumara Dissanayake

இலங்கையின் அரசியல் களம் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையிலே காணப்படுகின்றது.

தேர்தலை மையப்படுத்தியே அனைத்து அரசியல் கட்சிகளும் காய்நகர்த்தி வரும் நிலையில், சில தரப்புகள் சர்வதேச நாடுகளுடன் ஆலோசனை நடத்திவருவதனையும் அவதானிக்க முடிகிறது.

அந்த வகையில் ஜே.வி.பியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கனடா விஜயமும் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இவரது விஜயம் தொடர்பில் நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலே, நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயகவின் தலைமையில் கனடாவின் டொரொண்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பின் போது இளைஞன் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வியொன்றை கேட்டதை அடுத்து அந்த இளைஞன் அரங்கை விட்டு வெளியேற்றப்பட்டதாக காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

அத்துடன், குறித்த இளைஞன் ஏன் அரங்கைவிட்டு வெளியேற்றப்பட்டார்? அனுர ஏன் அந்த இளைஞனுக்கு பதிலளிக்கவில்லை? அவர் செய்த குற்றம் என்ன? என்ற கேள்விகளும், விமர்சனங்களும் எக்ஸ் (X) சமூக தளத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த பின்னணியில், கனடாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றதா? உண்மையில் நடந்த சம்பவம் என்ன என்பதை factseeker ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி, கேள்வி எழுப்பிய இளைஞன் அரங்கை விட்டு வெளியேற்றப்படவில்லை என்பதையும், குறித்த இளைஞனின் கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க பதில் வழங்கியுள்ளார் என்பதையும் factseeker கண்டறிந்துள்ளது.

அத்துடன், குறித்த நிகழ்வில் பங்குபற்றிய வேறொரு நபர் நிகழ்வின்போது தொடர்ச்சியாக கருத்துகளை வெளிப்படுத்தி, நிகழ்வில் ஏனையோர் கலந்துரையாட இடமளிக்காது இடையூறு விளைவித்த நிலையில், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளினால் குறித்த நபர் வெளியேற்றப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியினர் factseeker இடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், நிகழ்வில் தமிழில் கேள்வி எழுப்பியிருந்த குறித்த இளைஞனின் கேள்விக்கு அனுரகுமார திசாநாயக்க பதில் தெரிவித்திருந்தார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆகவே, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதைப்போன்று, கனடாவில் டொரொண்டோ நகரில் நடத்திய மக்கள் சந்திப்பின் போது இளைஞன் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வியொன்றை கேட்டதை அடுத்து அவரை அரங்கை விட்டு வெளியேற்றியதாக பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.