வலி. வடக்கில் காணப்படும் 07 ஆலயங்கள்: பொதுமக்கள் சென்று வழிபட அனுமதி

OruvanOruvan

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன.

இதன்போது உரையாற்றிய கௌரவ வடக்கு மாகாண ஆளுநர், அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கௌரவ ஆளுநர் கூறினார்.

கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன.

சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் கூறினார்கள்.

இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதி பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பற்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன் யுக்திய விசேட சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிசாருக்கு ஆளுநர் கூறினார்.