இலங்கை - இந்திய நில இணைப்பு: புதுடில்லியில் நாளை பேச்சுகள் ஆரம்பம்

OruvanOruvan

இலங்கை மற்றும் இந்தியாவை இணைக்கும் வகையில் பாலம் ஒன்றை அமைப்பது தொடர்பான பேச்சுகள் நீண்டகாலாக இருநாட்டு அரசாங்கங்களும் இடையில் உள்ளது.

கடந்த காலங்களில் இவை வெறும் கருத்துகளாக மாத்திரம் இருந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை மட்டத்திற்கு இந்த விடயம் நகர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இதுகுறித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

தனுஷ்கோடி, தலைமன்னார் இணைப்பு

இந்த சந்திப்பின் பின் கருத்து வெளியிட்ட பிரதமர் மோடி, இரண்டு நாடுகளுக்கும் இடையே தரைவழிப் பாதையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என தெரிவித்திருந்தார்.

OruvanOruvan

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பில் பல ஆண்டு காலமாகப் பேசப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் 2015ஆம் ஆண்டு உத்தியோகப்பூர்வ பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

2015ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றிருந்த ரணில் விக்ரமசிங்க, இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட தருணத்தில் மோடியிடம் இந்த விடயம் குறித்து கலந்துரையாடியிருந்தார்.

தனுஷ்கோடி, தலைமன்னார் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் குறித்து இருநாடுகளும் ஆலோசித்துள்ளதாக அந்த காலப் பகுதியில் இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

‘இராமர் பாலம்’ ‘ஆதாமின் பாலம்’

இந்தத் திட்டத்திற்கான நிதியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருந்தது என இந்தியாவின் அப்போதைய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். எனினும், அதற்குப் பிறகு அந்தப் பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டன.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த நேரத்தில், நரேந்திர மோடியால் முன்வைக்கப்பட்ட அதே திட்டத்தை, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னரும், நரேந்திர மோடி முன்வைத்திருந்தார். அதன் பிரகாரமே மீண்டும் பேச்சுகள் ஆரம்பமானது.

MONEY SHARMAMONEY SHARMA

MONEY SHARMA

இலங்கை, இந்தியாவை இணைக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் இயற்கையான வடிவங்கள் ‘இராமர் பாலம்’ அல்லது ‘ஆதாமின் பாலம்’ என வரலாற்றுக் காலம் தொட்டு அழைக்கப்படுகின்றது.

ராமேஸ்வரம், மன்னார் பகுதிகளை இணைக்கும் வகையில் சுண்ணாம்புக் கற்களால் ஆன இந்த வடிவம் சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ளது.

உயர்மட்ட குழு இன்று இந்தியா செல்கிறது

இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் கட்டப்படும் என்றால், இந்தப் பாலத்தைச் சார்ந்து அமைக்கப்படுமா அல்லது வேறு விதமாக அமைக்கப்படுமா என இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியானது, மிகவும் ஆழம் குறைந்த பகுதி என்பதால் எளிதாகப் பாலம் அமைக்க முடியும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறை முன்னாள் சிரேஷ்ட பேராசியரான எஸ்.ஏ.நோர்பட் அண்மையில் கூறியிருந்தார்.

இதேவேளை, சேது சமுத்திர திட்டம் பல ஆண்டுக்காலமாகப் பேசப்பட்டு வருகின்ற பின்புலத்திலேயே பாலம் அமைக்கும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் அடுத்தகட்ட பேச்சுகளை முன்னெடுக்க ஜனாதிபதி செயலகத்தின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு இன்று புதன்கிழமை இந்தியா செல்கிறது.

இந்தக் குழு நாளை வியாழக்கிழமை (28) புதுடில்லியில் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

தூதுக்குழுவில் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர்கள், ரயில்வே பொது மேலாளர், சுங்கத் தலைமை இயக்குநர் மற்றும் தலைமைப் பணியாளர் அலுவலகத்தின் இயக்குநர் ஆகியோர் உள்ளனர்.