அரச அதிகாரிகளினால் பாரியளவில் நிதி வீணடிப்பு: புதிய ஆய்வில் தகவல்

OruvanOruvan

Srilanka Government Vehicles

அரச அதிகாரிகளின் செயற்பாடு காரணமாக பாரியளவு நட்டம் ஏற்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவதினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரச வாகனங்களால் வருடம் ஒன்றுக்கு 20 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களை இயக்குவதற்கு ஒரு கிலோமீட்டருக்கு சுமார் 300 ரூபா செலவாகும் என போக்குவரத்துக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவில் தெரியவந்துள்ளது.

எனினும், அதனை 100 ரூபாயாக குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது வளங்களை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக மனிதவள மற்றும் பாதுகாப்புத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட தரவுகளின் படி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

2022ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, அரசாங்க நிறுவனங்களில் சுமார் 82,000 வாகனங்கள் உள்ளன.

சுமார் 76,000 வாகனங்கள் இயங்கும் நிலையில் உள்ளதாகவும், சுமார் 5,500 வாகனங்கள் இயங்காத நிலையில் இருப்பதாகவும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், இயங்கும் நிலையில் வாகனம் ஒரு கிலோமீட்டர் ஓடுவதற்கு சுமார் 300 முதல் 500 ரூபாய் வரை செலவாகும் என தெரியவந்துள்ளது.

ஆனால், அரச நிறுவனங்களுக்குத் தேவையான வாகனங்களை குத்தகை அடிப்படையில் தனியாரால் பெற்றுக் கொண்டால், 100 ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலையில் ஒரு கிலோமீட்டரை ஓட்ட முடியும் என தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களை முறையாக அகற்றி இந்த நடைமுறையை பின்பற்றினால், அரச செலவீனத்தில் நேரடியாக சுமார் 20 பில்லியன் ரூபாயை சேமிக்க முடியும் என தெரியவந்துள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தனவின் தலைமையில் உபகுழுவொன்றை நியமித்து இந்த அறிக்கையை ஆழமாக ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழு நாடாளுமன்றத்தில் கூடிய போது இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.