உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; நீதிமன்றில் விளக்கமளிக்க மைத்திரிக்கு உத்தரவு: இலங்கையின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

28.03.2024 Local News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; நீதிமன்றில் விளக்கமளிக்க மைத்திரிக்கு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சி.ஐ.டி.க்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் 04ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில், குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் உண்மைகளை அறிக்கையிட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மார்ச் மாதத்தில் பணவீக்கம் குறைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.9 வீதமாகக் குறைந்துள்ளது. அத்துடன், முந்தைய மாதத்தில் (பெப்ரவரி) 5.9 வீதமாக பதிவாகியிருந்தது. என்றாலும், உணவுப் பணவீக்கம் 3.5 வீதத்தில் இருந்து 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. 7 வீதமாக இருந்த உணவுப் பொருள் அல்லாத பணவீக்கம் -0.5 வீதமாகக் குறைவடைந்துள்ளது.

சிறுவர்களிடையை தீவிரமாக பரவும் புதிய வைரஸ்

கை, கால் மற்றும் வாய் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொரளை சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு வாயில் சிவப்பு புள்ளிகள் அல்லது மூட்டுகளில் வெள்ளை நீர் கொப்புளங்கள், காய்ச்சல் ஏற்பட்டால் இது ஒரு வைரஸ் நோய் என்பதினை பெற்றோர்கள் அவதானிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இலவசமாக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு இனி கட்டணம்

விற்பனை நிலையங்களில் இலவசமாக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பில் கடையென்றில் பாரிய தீப்பரவல்

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களத்தில் இருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு முன்பாக உள்ள வேல்ஸ் குமார மாவத்தையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கெஹலியவின் விளக்கமறியல் நீடிப்பு

தரமற்ற இன்ட்ரவெனஸ் இம்யூனோகுளோபுலின் (IVIG) மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 பேர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்..

தேங்காய் பால் ஏற்றுமதியால் 971 மில்லியன் ரூபாய் வருவாய்

தேங்காய் பால் ஏற்றுமதியின் ஊடாக கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் இரண்டாயிரத்து 971 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.

அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

கிரீஸ் அரசாங்கம் 2012 ஆம் ஆண்டு வழங்கிய திறைசேரி பத்திரங்களை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜிவ சேனசிங்கவினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்களுக்கு சிறைத்தண்டனை

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 36 தமிழக கடற்தொழிலாளர்ககளில் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 33 பேருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த செந்தில் தொண்டமான்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழில் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின் தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.

ஜப்பானிய முதலீட்டில் மிதக்கும் சந்தை அபிவிருத்தி

ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவர் கோட்டை மிதக்கும் சந்தையை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு கட்டுப்பாடு

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 4-5 மில்லியன் முட்டைகள் கையிருப்பில் இருப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

கிராண்ட்பாஸ் பகுதியில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

கிராண்ட்பாஸ் பகுதியில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு 36 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். கடந்த 26ஆம் திகதி சந்தேக நபருக்கும் உயிரிழந்தவருக்கும் வாக்குவாதம் முற்றியமையினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை

கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குரகல பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்தை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

''ரணிலின் பிள்ளைகள் போல'' ; கேலி செய்ததால் கஞ்சன - எரந்த இடையில் முரண்பாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசகராக இருந்த எரந்த கினிகேவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ''ரணிலின் பிள்ளைகள் போல'' என எரந்த கினிகே கேலி செய்தமையால், ஆத்திரமடைந்த கஞ்சன அவரை தாக்க முற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

பிரபல வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி மோசடி - மக்களுக்கு எச்சரிக்கை

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் பொதுமக்களின் தகவல்களை பெறும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் மீண்டும் வேலைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 2 ஆம் திகதி காலை 6.30 முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார சேவைகள் தொழிற்சங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. வைத்தியர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதுடன், ஏனைய சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இவ்வாறு மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 வீத சம்பள உயர்வு- ஜீவன் தொண்டமான் மறுப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அதனை ஏற்க மறுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் 1,700 ரூபா சம்பள அதிகரிப்பு என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான நிலத்தொடர்புகள் குறித்த கலந்துரையாடல் இன்று

இந்தியாவுடனான நிலத்தொடர்புகள் குறித்த கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர் இதற்காக நேற்று (27) இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டனர்.