யாசகம் பெறும் சிறுவர்கள்: பிரதான காரணமாகும் பொருளாதார நெருக்கடி

OruvanOruvan

Children begging

இலங்கைத்தீவில் கொழும்பு தலைநகர் உள்ளிட்ட பிரதான தலைநகரங்களில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.

இதனுள் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அதன்படி , நாடளாவிய ரீதியில் 20,000 முதல் 30,000 வரை யாசகம் பெறும் தெருவோரச் சிறுவர்கள் காணப்படுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் மற்றும் தரவுக் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

ஆய்வொன்றின் மூலம் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

யாசகம் பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை பெருக கொவிட் தொற்றுநோய் சூழ்நிலையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பிரதான ஒரு காரணமாக காணப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் பேருந்து , புகையிரதம் , பிரதான வர்த்தக நிலையங்கள் , உணவகங்கள் போன்றவற்றில் யாசகம் பெற்று வருகின்றனர்.

நாம் அடிக்கடி பயணிப்பவராக இருந்தால், பெரும்பாலும் எங்களிடம் பணம் கேட்கும் சிறுவர்களை சந்திக்க நேரிடும். சில நேரங்களில், அவர்கள் எங்களிடமிருந்து பணம் பெறாமல் விலகிச் செல்ல மாட்டார்கள். நாம் சில நாணயங்களை வழங்குகிறோம்.

இது போன்று பணத்தை வழங்குவது அவர்களின் வாழ்க்கையை மாற்றுமா?

இவ்வாறான விடயங்கள் நாட்டில் நிகழ பல காரணங்கள் உறுதுணையாக காணப்படுகின்றன.

சிறுவர்களை கட்டாயப்படுத்தல்

சிறுவர் துஷ்பிரியோகம் என்பது உடல் ரீதியாக , மன ரீதியாக மட்டும் உள்ளடங்கிவிடுவதில்லை. ​​குழந்தைகள் வேறொருவரின் நன்மைக்காக பல வழிகளில் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள்.

குழந்தைகள் ஆபத்தான அல்லது ஆரோக்கியமற்ற நிலையில் பணிபுரிய தள்ளப்படுவது அல்லது குறைந்த ஊதியம், கட்டாய உழைப்பு போன்றவை இதில் அடங்கும்.

வறுமை

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள சவாலான நிலையில் தமது அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாததால் ஏராளமான சிறுவர்கள் தெருக்களில் யாசகம் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வறுமை காரணமாக அத்தகைய சிறுவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பும் காணாமல் போய்விடுகிறது.

சிறுவர் கடத்தல்

சிறுவர் கடத்தல் குழுக்கள் சிறுவர்களை அழைத்துச் சென்று யாசகர்களாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த குழந்தைகளில் பலர் வழிப்போக்கர்களிடமிருந்து பணம் எடுக்க யாசகர்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.

OruvanOruvan

Children begging

இது போன்ற பல்வேறுபட்ட காரணங்கள் நம்மிடையே காணப்படுவதால் அதற்கான தீர்வுகளும் மாறுபடும்.

நாட்டின் எதிர்கால தூண்களாக கருதப்படும் சிறுவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகிறது.

அரசாங்கமானது இலவசக் கல்வி என வழங்குவதை சிறுவர்களால் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் , பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வறுமையான சிறுவர்களுக்கு பயனடைந்து அவர்களுக்கான கல்வியை பெற்றுக்கொள்ளவும் முடிகிறது.

இதனை வெறுமனே ஒரு செய்தியாக விட்டுவிட முடியாது.

யாசகம் பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து போதைப்பொருள் விற்பனை, திருட்டு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்த நிலை மேலும் நீடித்தால் யாசகம் கேட்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து நாட்டின் எதிர்கால சந்ததி வேரோடு அழிந்து விடும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துவருகின்றனர்.