தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட உயிரினங்கள்: விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தம்பதியினர்

OruvanOruvan

Uinarings smuggled

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான 88 உயிருள்ள விலங்குகளுடன் இளம் வர்த்தக தம்பதியொருவர் நேற்று (25) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 35 வயதுடைய தம்பதியினரினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டம், விலங்கு நோய்கள் சட்டம் மற்றும் சுங்க கட்டளைச் சட்டத்தை மீறி குறிதத் உயிரினங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுங்கத்தின் வருவாய் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், சுங்கத்தின் பல்லுயிர் பிரிவு அதிகாரிகள் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்ட நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுச் சோதனையின் போது இது இடம்பெற்றுள்ளது.

இவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சட்டவிரோதமாக குறித்த தம்பதியினரால் கொண்டுவரப்பட்ட தட்டான், தவளை, மீன், குளவி, அணில், ஆமை, பல்லிகள், வெளவால், சாலமண்டர், அரிய வகை புழு, எலி போன்றவற்றை காற்றோட்டத்திற்காக தயார் செய்யப்பட்ட சிறிய பிளாஸ்டிக் பெட்டிகளில் அடைத்து கொண்டுவந்துள்ளனர்.

குறித்த தம்பதியை சுங்க அதிகாரிகள் கைது செய்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்ட விலங்குகளை கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிறுவனத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.