பசிலின் கோரிக்கையை மறுத்தார் ரணில்: ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல்

OruvanOruvan

Ranil Wickremesinghe and basil Rajapaksa

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பசில் ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலை முன்னர் திட்டமிட்டபடி நடத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நெருங்கிய அரசியல் நண்பர்களுக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என கடந்த இரண்டு அமைச்சரவை கூட்டங்களிலும் கருத்து வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டோபர் முதல் வாரத்தில் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கி மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடவுள்ளதாக இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தற்போது பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து இதுவரையிலும் முடிவெடுக்கவில்லை.

எனினும், அந்தக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பார்கள் என்றும் அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.