மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு: ஏனையோரின் நிலை என்ன?

OruvanOruvan

Sri Lankans detained in Myanmar to return home

மியன்மாரில் பயங்கரவாதிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள எட்டு இலங்கையர்கள் தாய்லாந்து ஊடாக தாயகம் திரும்புவதற்கு தயாராகி வருகின்றனர்.

மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்களின் பயணத்தை எளிதாக்கும் நோக்கில் தாய்லாந்து அதிகாரிகள் அவர்களுக்கான போக்குவரத்து விசாக்களை வழங்கியுள்ளனர்.

மியன்மாரின் தாய்லாந்து எல்லைக்கு அருகே பயங்கரவாத குழுவொன்றின் சைபர் அடிமைகளாக இலங்கை இளைஞர்கள் 56 பேர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக அண்மையில் தகவல்கள் வௌியாகி இருந்தன.

குறித்த பிரதேசம் கூகுள் வரைபடத்தில் 'Cyber Criminal Area' எனப்படும் இணையக் குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் கணினி துறையில் தொழில்களை பெற்றுத் தருவதாக கூறி அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையின் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் சிலர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும், இந்த நபர்கள் இணையக் குற்றங்களில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டது. எவ்வாறாயினும், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 8 பேரை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தற்போது, குறித்த 8 பேரும் மியன்மாரின் மியாவாடியில் உள்ள மத்திய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஏனையோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்து எல்லைக்கு அருகில், சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில் தற்போது மேலும் 18 இலங்கையர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மியாவாடி நகரத்திலிருந்து தோராயமாக 26 கிலோமீற்றர் தொலைவில், 28 இலங்கை இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.