குறைந்தபட்ச ஊதியத்தை 40 வீதமாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி: நாளாந்த சம்பளம் 200 ரூபாவால் அதிகரிப்பு

OruvanOruvan

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இலங்கையில் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் நிலையில், தொழிலாளர்களின் குறைந்தப்பட்ச ஊதியத்தை 40 வீதமாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது, அதன் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்தது.

இந்நிலையில், வறுமையில் சிக்கியுள்ள மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் குறைந்தபட்ச ஊதியத்தை 12,500 ரூபாவில் இருந்து 17,500 ரூபாவாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

"இது மிகவும் முக்கியமான முடிவு. இதன் கீழ் தேசிய நாளாந்த ஊதியமும் 200 ரூபாவால் அதிகரிக்கப்படும்" என்று அவர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மக்கள்தொகையில் 20 வீதமான ஏழை மக்களின் சராசரி மாத வருமானம் 17,572 ரூபாய் ஆகும்.

அதே சமயம் ஒட்டுமொத்த குடும்பங்களில் 90 வீதம் பேர் நெருக்கடியின் காரணமாக தங்கள் செலவினங்களை அதிகரித்துள்ளனர் என்று சமீபத்திய அரசாங்க தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் திட்டத்தின் உதவியால் இலங்கையின் பொருளாதாரம் மெதுவாக நிலைபெறுவதுடன், கடந்த பெப்ரவரியில் பணவீக்கம் 70 வீதத்தில் இருந்து 5.9 வீதமாக குறைந்துள்ளது.

எனினும், எரிபொருள் விலையேற்றம் மற்றும் கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட மூன்று வீத வற் வரி திருத்தம் என்பன வாழ்க்கைச் செலவை உயர்த்தியுள்ளதுடன் நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்களும் தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் வரி மற்றும் அதியாவசிய பொருட்களின் விலையை குறைக்கக் கோரி பல மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.