40 வருடங்களாக மறுக்கப்படும் உரிமை: கிழக்குத் தமிழர்கள் தொடர் போராட்டம்
கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் (மார்ச் 25) கல்முனை வடக்கு (உப) பிரதேச செயலகத்திற்கு முன்பாக, கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அம்பாறை மாவட்ட மக்கள் ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் (மார்ச் 26) தொடர்வதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படாத காரணத்தினால் அப்பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென நிதி ஒதுக்கப்படுவதில்லை என போராட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச சிவில் சமூக செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் சுட்டிக்காட்டினார்.
"கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக செயற்பாடுகளுக்கு எதிரான அடக்குமுறைகளும், அத்துமீறல்களும், அரசியல் தலையீடுகளும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற அதேவேளை, இந்த முறை அம்பாறை மாவட்டத்திற்கான டிசிபி நிதி ஒதுக்கீட்டிலும் எங்களுடைய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு ஒரு சதமேனும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
கல்முனை வடக்கு பிரதேச செயலகமானது 1993ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக ஒரு பிரதேச செயலகமான தரமுயர்த்தப்பட்டிருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பல சிக்கல்கள் காணப்படுகின்றன."
அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் 1986ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுடன், 1993ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக, உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, அன்றைய காலப்பகுதியில் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண அரச செயலாளராகப் பணியாற்றிய எஸ்.ஏ. ஒபதகே கல்முனை பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்தும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தமது நிர்வாகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிரதேசத்தில் அமைந்துள்ள கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளதாக கல்முனை வடக்கு பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் நிதி மற்றும் காணி அதிகாரங்களை இழந்து தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதியை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளுக்கு 300ற்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை என சிவில் சமூக செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.
“அம்பபாறை மாவட்ட செயலாளர் மற்றும் விடயத்திற்க பொறுப்பான அமைச்சரின் செயலாளருக்கும் 300ற்கும் மேற்பட்ட கடிதங்களை பொது அமைப்புகளாக நாம் எழுதியுள்ளபோதிலும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
இதுத் தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலாளரை பொது மக்கள் நேரடிாயாக சந்தித்து முறைப்பாடு அளித்த போதிலும் இந்த விடயத்தில் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது எனத் தெரிவித்தத மாவட்ட செயலாளர் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர், செயலாளரிடம் பேசி தீர்வினைப் பெற்றுத்தருவதாக கூறி ஆறு மாதங்கள் கடந்துள்ளபோதிலும் இதுவரை உரிய தீர்வை பெற்றுத்தரவில்லை.”
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 2023 நவம்பர் 28ஆம் திகதி கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை கணக்காளர்கள் உள்ளிட்ட முக்கிய நியமனங்களை வழங்கி முழுமையான பிரதேச செயலகமாக மாற்றுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் கீழ் 29 கிராம சேவையாளர் பிரிவுகள் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
ச.பார்த்திபன்