18 மாவட்டங்களில் காணாமல் போன சிட்டுக்குருவி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

OruvanOruvan

Sparrow missing in 18 districts

நான்கு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் போது இலங்கையில் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவிகள் அழிவடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் திகதி உலக சிட்டுக்குருவி தினமாக அறிவிக்கப்படுகிறது.

சிட்டுக்குருவியை பாதுகாக்கப்பட்ட பறவையாக அறிவிக்குமாறு 2007ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன்படி தற்போது சிட்டுக்குருவி பாதுகாக்கப்பட்ட பறவையாகக் கருதப்படுகிறது.

மலேரியாவைக் கட்டுப்படுத்த மெலத்தியோன் இரசாயனம் தெளிக்கப்பட்டதன் மூலமும், 1990களில் நுளம்புச் சுருள்களின் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதாலும் சிட்டுக்குருவியின் அழிவு ஆரம்பமானது என்றும் கூறப்பட்டது.

இதன் காரணமாக ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதாகவும் கொசுவர்த்தி சுருளில் உள்ள இரசாயனங்கள் பறவைகளின் முட்டை உற்பத்தியில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டுக்குருவிகள் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்ட இலங்கை இளம் விலங்கியல் நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர் நிசலி தயானந்தா,

சிட்டுக்குருவி தற்போது மிகவும் அரிதான பறவை எனவும், சிட்டுக்குருவியின் அழிவு முதலில் இலங்கையிலும் பின்னர் இந்தியாவிலும் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லாமை சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவதில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் சிட்டுக்குருவிகளின் அழிவை பாதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.