அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் தகவல்: இன்றைய முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Shorts Story - Local News

அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார்.

கெஹெலியவை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உத்தரவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உத்தரவினை ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி அறிவிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நீண்டநேர விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் 108 அடி சப்த தள இராஜகோபுர மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று திங்கட்கிழமை (25) நடைபெற்றது. மத்திய மாகாணத்தில் முதல் சப்ததள 108 அடி பிரமாண்ட இராஜகோபுரத்தையுடைய பிள்ளையார் ஆலயம் என்ற பெருமையைப் பெறும் இந்த ஆலயத்தில் ஐந்தாவது கும்பாபிஷேக நிகழ்வே இன்று நடைபெற்றது.

OruvanOruvan

113 கிடைக்காவிடில் கூட்டு ஆட்சி அமைக்கப்படும் - அனுர

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சிக்கு 113 பெரும்பான்மை கிடைக்காவிடின் ஏனைய இணக்கமான குழுக்களுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்போம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு வெங்காயத்தின் விலை குறைப்பு

புத்தாண்டை முன்னிட்டு வெங்காயத்தின் விலை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.புத்தாண்டு காலப்பகுதிக்குள் ஒரு கிலோகிராம் வெங்காயம் 375 முதல் 400 ரூபா வரை விற்பனை செய்யப்படும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இப்பாகமுவயில் இரு மாணவ குழுக்களிடையே மோதல் - 09 பேர் வைத்தியசாலையில்

குருநாகல் இப்பாகமுவயில் இரு மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 09 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனமொன்றின் இரு மாணவ குழுக்களிடையே நேற்றிரவு மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த 04 மாணவிகளும் 03 மாணவர்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் தினேஸுக்கு சீனாவில் மகத்தான வரவேற்பு

சீன பிரதமர் லீ கியாங்கின் அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன 6 நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை காலை சீனாவின் தலைவர் பெய்ஜிங் சென்றடைந்ததுடன், அங்கு அவருக்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தானியங்களை உலர்த்தும் தொழில்நுட்பம் வெற்றி - விவசாய அமைச்சு

நெல், சோளம் உள்ளிட்ட தானியங்களை உலர்த்தும் சோலார் டன்னல் டிரையர் தொழில்நுட்பம் வெற்றியடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் முதன்முறையாக சோளம், நெல், வெண்டைக்காய், பட்டாணி, எள், குரக்கன், உழுந்து போன்ற தானியங்களை பாதுகாப்பாக உலர்த்துவதற்காக இந்தப் புதிய விதை உலர்த்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு பால் மா விலையில் மாற்றமில்லை

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவின் விலையை குறைப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை என உள்ளூர் பால் மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விலை குறைக்கப்பட்டால் உள்நாட்டு பால் பண்ணையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு பயணித்த பிரதமர்

பிரதமர் தினேஷ் குணவர்தன ஐந்து நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சீனாவுக்கு பயணித்துள்ளார். சீன அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் நேற்று (24) இரவு அவர் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பயணத்தில் அவருடன் 10 பேர் கொண்ட குழுவொன்றும் இணைந்துகொண்டுள்ளது.

ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இன்று

இவ்வாண்டுக்கான முதல் சந்திரகிரகணத்தை காணும் வாய்ப்பு இன்று (25) ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 10.23 மணி முதல் பிற்பகல் 03.02 மணி வரை சந்திர கிரகணம் தென்படும். எவ்வாறாயினும், பிற்பகல் சந்திரகிரகணம் ஏற்படுவதால் இலங்கையர்களால் அதனை காண முடியாது.

பால்மா விலை குறைப்பை தொடர்ந்து தேநீரின் விலை குறைவடையும் சாத்தியம்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பால் தேநீரின் விலையும் 5 முதல் 10 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 150 ரூபாவினாலும் 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் திடீர் சுகவீனத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவனை வைத்தியாசாலையில் அனுமதிப்பதற்கான ஆம்புலன்ஸ் வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தினால், தாமதமாகவே மாணவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக சுமார் 150 மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை - இந்தியா இடையே பாலம்! சாகல ரத்நாயக்க இந்தியா பயணம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் குறித்து கலந்துரையாடல் இவ்வாரம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க எதிர்வரும் நாளை மறுதினம் 27ஆம் திகதி புதன்கிழமை டெல்லிக்கு செல்கிறார்.

கிழக்கு, ஊவா உள்ளிட்ட பல மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று பல்வேறு சந்தர்ப்பங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு - ஒரு வாரத்தில் 44 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் குழுக்களைச் சேர்ந்த 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த நடவடிக்கையின் போது போதைப் பொருட்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.