அதிகாரத்திற்காய் சதியாடும் ராஜபக்சாக்கள்: சம்பிக்க மக்களுக்கு எச்சரிக்கை

OruvanOruvan

Rajapaksa Family

இலங்கையில் மூன்று தசாப்த காலம் நீடித்த விடுதலைப் போராட்டத்தை ஆயுத ரீதியாக முடிவுக்கு கொண்டுவந்த ராஜபக்ச குடும்பம், தம்மை அரச குடும்பமாக சிங்கள தேசத்திற்கு காண்பிக்க முற்பட்டது.

ஆனாலும் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வங்குரோத்து ராஜபக்சாக்களை ஆட்சியைப் புரட்டிப்போட்டது.

ராஜபக்ச குடும்பத்தை, நாட்டிலுள்ள சிங்கள மக்கள் மட்டுமல்ல அனைத்தின மக்களும் ஒன்றிணைந்து ஆட்சியிலிருந்து நீக்கினர்.

அத்தியவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பல நாட்களாக மக்கள் வரிசைகளில் காத்திருக்க நேரிட்டது .அதிக மின்வெட்டு அமுலாக்கப்பட்டது. எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு, பொருட்களின் விலை அதிகரிப்பு என மக்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்திருந்தனர்.

ஆனால், இன்னுமும் பதவிப் பேராசை அவர்களை விடவில்லை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் , பொதுத் தேர்தல் என அனைத்திலும் திட்டமிட்டு களமிறங்க தயாராகி வருகிறது ராஜபக்ச குடும்பம்.

இந்நிலையில், ஐந்து ராஜபக்சக்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து தேர்தலை நடத்துவதா? அல்லது ஜூன் மாதத்தில் கடனை மறுசீரமைத்து நாட்டை ஸ்திரப்படுத்துவதா? என்பதை இந்த தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச இனியும் அரசியலில் விளையாடாமல் ஓய்வு பெற வேண்டும். அதிகார பேராசையினால் மீள மேற்கொள்ளப்படும் மோசடியான செயற்பாடுகளினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அப்பாவி உறுப்பினர்கள் மீண்டும் சங்கடத்திற்கு உள்ளாக நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரும், பசிலின் அரசியல் விளையாட்டுகளுக்கு ஏமாற வேண்டாம்.அவர்கள் ஐந்து பேரையும் நாடாளுமன்றத்திற்கு சென்று அடுத்த தேர்தலுக்குப் பிறகு நாட்டு மக்களைத் தூண்டி உங்களுக்கு எதிராக செயற்பட வைப்பதற்கான சதிகளைச் செய்வார்கள் எனவும் சம்பிக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டிய மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோர் இருக்கும் எந்த அரசியலிலும் இணைய வேண்டாம் எனவும் சம்பிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த வகையில் நாடு தற்போது பொருளாதார ரீதியாக மெல்ல மெல்ல முன்னேறிவரும் நிலையில் ஊழல் நிறைந்த ராஜபக்சாக்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் போது மக்கள் இருப்பதையும் இழந்து தவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சம் பரவலாகக் காணப்படுகின்றது.