களனி பல்கலை மாணவன் உயிரிழப்பு: பல்கலை நிர்வாகத்தின் அசமந்தமே காரணம் - வெடித்தது பாரிய போராட்டம்

OruvanOruvan

Students Protest

களனி பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் நேற்று இரவு திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நோயாளர்காவு வண்டி வசதியோ வேறு வாகனமோ பல்கலைக்கழகத்தில் இல்லாமையினால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தினாலேயே, இந்த மரணம் நிகழ்ந்ததாகத் தெரிவித்தே பல்கலை மாணவர்களினால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் தொடர்பில் களனி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் திஸ்ஸபுர ஸ்ரீ சுமேத கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த பல நாட்களாக மாணவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் தருமாறு நாம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றோம்.

குறிப்பாக நோயாளர்காவு வண்டியொன்றை மாணவர்களுக்காக வழங்குமாறு தெரிவித்திருந்தோம். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இவற்றை கவனத்தில் கொள்ளவில்லை.

ATHAVAN 07ATHAVAN 07

ATHAVAN 07

இதனால் ஒரு மாணவரே உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் அந்த மாணவன் சுகயீனம் அடைந்தபோது, சக மாணவர்கள் நிர்வாகத்தை தொடர்புக்கொள்ள தொலைப்பேசியில் அழைப்பை ஏற்படுத்தியும்கூட, அவர்கள் தொலைப்பேசி அழைப்பிற்கு பதில் வழங்கவில்லை. அவர்கள் தங்களின் தேவைக்காகவும் அரசாங்கத்தின் தேவைக்காகவும் தான் இதுவரை காலமும் செயற்பட்டார்கள்.

பின்னர் சுமார் 20 நிமிடங்கள் கழித்து, முச்சக்கரவண்டியில் குறித்த மாணவரை சக மாணவர்கள் ஏற்றிக் கொண்டு சென்றபோது, தான் ஒரு வாகனத்தை இவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆண்கள் விடுதியில் இருந்து வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே குறித்த மாணவர் உயிரிழந்துவிட்டார்.

இன்னும் 5- 10 நிமிடங்கள் முன்கூட்டி அவரை அழைத்து வந்திருந்தால், காப்பாற்றியிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். நிர்வாகத்தின் அசமந்த போக்கினால்தான் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பிரச்சினைகளை நாம் எடுத்துக் கூறினால், பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்கப்படுவதில்லை என்பதுதான் இவர்கள் கூறும் பதிலாக உள்ளது. இந்த பொறுப்பற்ற செயற்பாட்டினால், இன்று மாணவர்கள் உயிரிழக்கும் நிலைமைக்கே தள்ளப்பட்டுள்ளார்கள். மாணவர்களுக்கு உரியத் தீர்வொன்று வழங்கும்வரை, நாம் எமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை” என களனி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் திஸ்ஸபுர ஸ்ரீ சுமேத தெரிவித்துள்ளார்.