அதிகரித்த வெப்பத்தால் வீடுகளுக்கு படையெடுக்கும் விஷ ஜந்துகள்: வனவிலங்கு திணைக்களம் அவசர கோரிக்கை

OruvanOruvan

அதிகரித்த வெப்பம் காரணமாக ஊர்வன மற்றும் நிலநீர் வாழ் உயிரினங்கள் வீடுகளை நோக்கி படையெடுப்பதாகவும் இவ்வாறான நேரங்களில் பொது மக்கள் பீதியடைய வேண்டாம் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் நீடிக்கும் வறண்ட காலநிலை காரணமாக வன விலங்குகள் மற்றும் மற்றும் தாவரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊர்வன மற்றும் நிலநீர் வாழ் உயிரினங்கள் தங்கள் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் வெப்பத்திலிருந்து தப்பிக்க மனித குடியிருப்புகளை அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இதன்படி, மனித வாழ்விடங்களுக்கு அருகில் காணப்படும் ஊர்வனவற்றை கையாளும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் அறிவுறுத்துகிறது.

வறண்ட காலநிலை மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக விலங்குகள் மனித வாழ்விடங்களில் தஞ்சம் புகுவதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்தார்.

இயற்கை வாழ்விடங்கள் அழிக்கப்படும் போது, விலங்குகள் மனித குடியிருப்புகளுக்குள் நுழைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டங்கள், வாகனம் நிறுத்தி வைக்குமிடங்கள், கழிவறைகள், சமையலறைகள் அல்லது உட்புறத் தோட்டங்களுக்குள் நுழையும் ஊர்வன மற்றும் நிலநீர் வாழ் உயிரினங்களை கண்டு பீதி அடைய வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

“மக்களை அமைதியாக இருக்குமாறு நான் அறிவுறுத்துகிறேன். விலங்குகளை காயப்படுத்த கூடாது. ஊர்வனவை அடையாளம் கண்டு, கண்காணித்து, சரியான இடத்தைக் கண்டுபிடித்து, அமைதியாக விரட்டுவதுதான் சிறந்தது’’

1992 என்ற ஹாட்லைனில் உதவி கோரிக்கைகளுக்கு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் பதிலளிக்கிறது, ஆனால் அதிகாரிகளால் அனைத்து அழைப்புகளையும் கவனிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளிலும், நாட்டின் தொலைதூர பகுதிகளிலும் சமீபத்தில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், படத்தை தொலைபேசி மூலம் அனுப்பினால், அதிகாரிகள் பாம்பை அடையாளம் கண்டு, விலங்குகளை எவ்வாறு பாதுகாப்பாக அகற்றுவது என்பது குறித்த அறிவுறுத்தல்களை வழங்க முடியும் என்றார்.

இதேவேளை, கொழும்பில் அண்மைய நாட்களாக வீடுகளுக்குள் பாம்பு புகுந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதேபோல் தென்னிலங்கையில் பாடசாலை ஒன்றிற்குள்ளும் பாம்பு புகுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.