மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து: உடனடி விசாரணைக்கு உத்தரவிட்ட டிரான் அலஸ்

OruvanOruvan

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தனக்கு நன்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தார்.

“தாக்குதல்கள் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் சிறு குற்றவாளிகள்.

உண்மையான குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர். எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டவும், நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டால் விசேட அறிக்கையொன்றை வழங்கவும் நான் தயாராக உள்ளேன்” என மைத்திரிபால கூறியிருந்தார்.

இந்த கருத்து தொடர்பிலேயே உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாரென தனக்கு தெரியும் எனக் கூறிய மைத்திரிபால சிறிசேனவை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்துமாறு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.