காஸா எல்லைக்குச் செல்லும் ஐ.நாவின் பொதுச் செயலாளர்: ராஃபா நகரில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீன மக்கள்

OruvanOruvan

காஸாவுடனான எகிப்திய எல்லைக்கு ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் இன்று சனிக்கிழமை (மார்ச் 23ஆம் திகதி) செல்ல இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்‌ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடுமையான போர் நிலவிவரும் நிலையில் சண்டை நிறுத்தத்துக்கு மீண்டும் அழைப்பு விடுக்கும் வகையில் அவர் காஸா எல்லைக்குச் செல்கிறார்.

கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக நடந்து வரும் போர் காரணமாக மில்லியன்கணக்கான பலஸ்தீனர்கள் அவுதியுறுகின்றனர்.

காஸாவைச் சேர்ந்த 2.3 மில்லியன் பாலஸ்தீனர்களில் பெரும்பாலானோர் ராஃபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ராஃபா நகரில் ஹமாஸ் படைகள் இருப்பதாகவும் அவற்றை வீழ்த்தினால் மட்டுமே ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்க முடியும் என்று இஸ்‌ரேல் நம்புகிறது.

இதனால் ராஃபாவில் நிலம் வழித் தாக்குதலை நடத்த இஸ்‌ரேல் தயாராகி வருகிறது.

அவ்வாறு நேர்ந்தால் உயிர்ச் சேதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், காஸாவுக்கு அனுப்பிவைக்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் எகிப்தின் வடக்குப் பகுதியில் உள்ள அல் அரிஷ் நகரில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கிருந்து அவை காஸாவின் தென் பகுதியில் உள்ள ராஃபாவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

அல் அரிஷ் நகரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள ஐநா மனிதாபிமானப் பிரிவு ஊழியர்களை குட்டரஸ் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.