பாலியல் வயது 14ஆக குறைக்கப்பட்ட விவகாரம்: சட்டமூலத்தை மீளப்பெறுவதாக நீதி அமைச்சர் தெரிவிப்பு

OruvanOruvan

14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் தமது விருப்பத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் பாலியல் ரீதியிலான உறவு கொண்டால் அதற்கான தண்டனையை குறைக்கும் வகையிலான சட்டமூலம் தொடர்பில் அண்மையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த நிலையில், அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருந்த குறித்த சட்டமூலத்தை மீளப்பெறுவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று (23) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“பெரும்பாலானோர் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதை இடைநிறுத்துமாறு கோரினார். இது குறித்து தொடர்ந்து கலந்துரையாடப்பட வேண்டும் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். இந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் இதனை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என சட்டமா அதிபருக்கு அறிவித்தேன்.

மாறாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கலந்துரையாடப்படும். பாராளுமன்றத்திலும் இது மீளபெறப்படும்" என்றார்.

மீளாய்வு செய்ய சஜித் வலியுறுத்து

பாலின உறவுக்கான வயது வரம்பை 14 ஆக குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் பாராளுமன்றில் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற இலங்கைப் பெண்களின் வலுவான கோரிக்கையை அவர் எடுத்துரைத்தார்.

தண்டனைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.