நாடாளுமன்றத் தேர்தல் முறை மறுசீரமைப்பு: அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சி கடும் எதிர்ப்பு

OruvanOruvan

தேர்தல் முறை மாற்றம் என்ற போர்வையில் மாகாண சபை தேர்தலை ஒத்திவைத்தது போல நாடாளுமன்றத் தேர்தலையும் ஒத்தி வைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

புதிதாக அரசாங்கம் முன்மொழிந்துள்ள தேர்தல் முறை மாற்றம் என்பது சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை கேள்விக்குறியாக்கும் விடயமாகும்.

குறிப்பாக வடக்கு கிழக்கு தவிர்ந்த தென் இலங்கையில் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதே இந்த முன்மொழிவாகும்.

சிறுபான்மை மக்களின் குரல்வலைகளை நசுக்க முயற்சி

புதிய தொகுதிவாரி தேர்தல் முறை சீர்திருத்தத்தை சிறிய கட்சிகளும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது அரசுக்கு தெரியும்.

இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை இழுத்தடிப்புச் செய்வதற்கு ஒரு வாய்ப்பை தேடுவதே புதிய முன்மொழியின் நோக்கமாகும்.

பிரதேச சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு தளமாக இருந்த மாகாண சபைகளை மக்கள் பிரதிநிதிகள் அற்ற சபைகளாக மாற்றுவதற்கு கடந்த அரசாங்க காலத்தில் முன்மொழிந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் முறை மாற்றம் என்ற அஸ்திரமே காரணமாகும்.

சிறுபான்மை மக்களின் குரல்வலைகளை நசுக்குவதற்காக அதே சிறுபான்மை மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் ஒட்டுமொத்த ஒத்துழைப்போடு மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதே பாணியை பின்பற்றி நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைத்து ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படுவதற்கு தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கத்தவராக இருக்கின்றவர்கள் ஒரு போதும் ஒத்துழைக்கக் கூடாது.” என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் முறையை மறுசீரமைப்பதற்கான சட்டத்தை வரைய கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் 160 பேர் தொகுதிவாரி முறையிலும், 65 விகிதாசார அடிப்படையிலும் தெரிவுசெய்யும் வகையில் இந்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.