இலங்கை கடற்படையின் கைதை கண்டித்து இந்திய மீனவர்கள் போராட்டம்: மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க தீர்மானம்

OruvanOruvan

Indian fishermen strike

கைது செய்யப்பட மீனவர்களை விடுவிக்குமாறு கோரியும், இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகளை கண்டித்தும் இராமேஸ்வர மீனவர்களினால் இன்று (23) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 32 மீனவர்கள் கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை நெடுந்தீவு மற்றும் மன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து இழுவைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த பின்னணியில், மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்த இராமேஸ்வர மீனவர் சங்கங்கள், காலவரையறை அற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்குச் செல்லாமல் சுமார் 800 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்காரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 10,000 மீனவர்கள் நேரடியாகவும் 50,000 மீன்பிடி துறைசார் தொழிலாளர்கள் தொழிலை இழந்துள்ளதாக அறியமுடிகிறது.

தொடரும் மீனவர் கைது

இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில் மாதங்களில் 150 இற்கும் அதிகளவான மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 30 இற்கும் மேற்பட்ட இழுவை படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தொடர்ந்து கைதுகள் இடம்பெறுவதால் காரணமாக இந்திய மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது மட்டுமல்லாது உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்படும் மீனவர்கள் விடுவிக்கப்படாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் குடும்பங்கள் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலே, இந்திய மீனவர் கைது விடயம் தொடர்பாக இந்திய பிரதமர் அல்லது வெளிவிவகார அமைச்சு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தால் இலங்கை அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கி இருக்குமென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், மீனவர்கள் ஏன் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்படுகிறார்கள் என கேள்வி எழுப்பும் இந்திய மீனவர்கள் தாம் கடற்தொழிலை கைவிட்டு வேறு தொழிலை தேட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

தேர்தலை புறக்கணிக்க தீர்மானம்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி இராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவர்கள் தமது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மீனவர்கள் மற்றும் படகுகள் விடுவிக்கப்படவில்லை என்றால், மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதற்கும் தீர்மானித்துள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் வாக்குறுதிகளை நிறைவேற்றாதபோது தாம் எதற்காக அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அத்துடன், இலங்கை சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்கள் நிபந்தனை இன்றி விடுவிக்கப்படும் போதுதான் தமது தீர்மானங்கள் குறித்து மீள்பரிசீலனை செய்வதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டின் கீழ் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்படமாட்டோம் என்பதனை இந்திய அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய அரசு பாராமுகம்

இந்தநிலையில், மீனவர்களை விடுவிக்க வெளிவிவகார அமைச்சர் உதவுவதாக உறுதியளித்த போதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என இராமேஸ்வரம் விசைப்படகுகள் சங்க தலைவர் யேசுராசா தெரிவித்துள்ளார்.

அத்துடன், மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையின் நடவடிக்கை தீவிரமடைந்து வருவதாகவும், படகு செலுத்தினார்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதுடன், சிறைச்சாலையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மீன்பிடி நவடிக்கையில் ஈடுபடுவதனை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக யேசுராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் கோரிக்கை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான சட்ட உதவிகளை உறுதி செய்யுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் எந்த தாமதமும் இன்றி தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.