பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து: உண்மை வெளிகொணரப்படுமா?

OruvanOruvan

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்து தற்போாது இலங்கைத் தீவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

“குண்டுத் தாக்குதல்களை நடத்தியது யாரென எனக்குத் தெரியும்” என மைத்திரிபால சிறிசேன நேற்று (22) தெரிவித்திருந்தார்.

அவரது கருத்து தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

மைத்திரியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவரை கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு அளித்துள்ளார்.

இது இரகசியம் காக்க வேண்டிய விடயம் அல்ல எனவும் மக்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் காவிந்த ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை,மைத்திரிபால சிறிசேனவின் கருத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப், “இலங்கையின் அரசியல் இறையாண்மைக்கு மாபெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது.

அவர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் குற்றவாளிகள் உடன் கைது செய்யப்பட வேண்டும்.

சூத்திரதாரிகளுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.” என வலிறுத்தியுள்ளார்.

”உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரி பற்றிய தகவல்களை இதுவரை மறைத்து வைத்தமை மைத்திரிபால சிறிசேனவை பிடித்த ஒரு குற்றவியல் நோய்.

இந்த நோய் இலங்கை பொலிஸாருக்கு ஏற்படாதிருக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் கவனம் செலுத்த வேண்டும்.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

'ஈஸ்டர் படுகொலை" நூல் வெளியீடு

இந்த பின்புலத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய நூலொன்று இன்று வெளியிடப்படவுள்ளது.

'ஈஸ்டர் படுகொலை" என்ற பெயரில் இந்த நூல் வெளியிடப்படவுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

OruvanOruvan