ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுங்கள்: மக்களை கவரும் அறிவிப்புகளும் வெளியாகும்
தேர்தலொன்றை எதிர்கொள்ளும் சூழ்நிலை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதால் தென்னிலங்கை அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாக இருக்கிறார். மறுபுறம் பொதுத் தேர்தலே அவசியம் என பிரதான ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன விடாபிடியாக உள்ளது.
தேர்தலை நடத்துவதில் உறுதியாக இருக்கிறார்
பொதுத் தேர்தலை நடத்துவதற்காக அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்திய இரண்டுகட்ட பேச்சுகள் தோல்வியில் முடிந்துள்ளன.
விரைவில் மூன்றாங்கட்ட பேச்சுகளை அவர் நடத்த உள்ளார். அதற்கு முன்னதாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்களுடன் பசில் அடுத்தவாரம் முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்.
என்றாலும், பொதுத் தேர்தல் நடைபெற்றால் தமது செல்வாக்கு சரிந்துவிடும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் ரணில், வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் உறுதியாக இருக்கிறார்.
அரச தரப்பு செய்திகளின் பிரகாரம் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
டொலரின் பெறுமதியும் 280 ரூபாவிற்கு கீழ் வந்துவிடும்
இந்த நிலையில், கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்து ரணில் கலந்துரையாடியுள்ளார். இதன்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு அனைத்து அமைச்சர்களையும் தயாராகுமாறும் கட்டளையிட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாகவே அவர் மக்களை கவரும் பல்வேறு அறிவிப்புகளை விடுத்து வருகிறார்.
குறிப்பாக ஜுன் மாதத்தில் இலங்கையில் பொருளாதார குறிப்பிடத்தக்களவு ஸ்திர நிலையை அடையும் என ரணில் கூறியுள்ளதுடன், டொலரின் பெறுமதியும் 280 ரூபாவிற்கு கீழ் வந்துவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மலையக மக்களுக்கு காணி உரிமை
இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்ட ரணில், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் 5 கிராம சேவகர் பிரிவுகளுக்குச் சொந்தமான 235 ஏக்கர் காணியை பாதுகாப்பு படையினரிடம் இருந்து விடுத்து பொது மக்களுக்கு கையளித்தார்.
அனைத்து தரப்பு மக்களையும் கவர்வதன் ஊடாக ஜனாதிபதித் தேர்தலில் குறிப்பிடத்தக்களவு சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வது ரணிலின் இலக்காக உள்ளது.
விரைவில் மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி உரிமையை வழங்கும் திட்டத்தையும் ரணில் ஆரம்பித்துவைக்க உள்ளார். அதன் ஊடாக பெருந்தோட்டங்களில் வாழும் அனைத்து மக்களுக்கும் 10 பேர்ச் காணி வழங்கப்படும் என இ.தொ.கா கூறுகிறது.
இதனால் மேலும் பல மாதங்கள் தமது வாக்கு வங்கியை சரிசெய்துவிட்டு ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது ரணிலின் திட்டமாக உள்ளது. அதன் காரணமாகவே, ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சர்களும் அவர் கட்டளையிட்டுள்ளதுடன், பசிலின் யோசனையையும் நிராகரித்துள்ளார்.