ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க தயார்: நிச்சயமாக வெற்றி என்கிறார் தயாசிறி
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் நடைபெற வேண்டுமென்பதுடன், அனைத்து கட்சிகளும் தமது தீவிர பிரச்சாரங்களையும் ஆரம்பித்துள்ளன.
தேர்தலுக்கான பிரசாரங்கள் ஆரம்பிக்கப்படுள்ள போதிலும் ஆளுங்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இதுவரை உத்தியோகப்பூர்வ அறிவிக்கப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.
“இலங்கையின் அனைத்து சமூகத்தினரிடமும் தமக்கு நல்ல ஆதரவு உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுடன் சுமூகமான உறவு உள்ளதுடன், சமூகத்துடனும் எனக்கு எவ்வித விரோதமும் இல்லை.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன்” எனக் கூறியுள்ளார்.
தயாசிறி ஜயசேகர தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி கடந்த 23 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
மனிதநேய மக்கள் கூட்டணியில் 20 அரசியல் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் தம்மை இணைத்துக்கொண்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.