உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடத்தியது யார்?: உண்மையை உடைப்பேன் என்கிறார் மைத்திரி

OruvanOruvan

இலங்கை கடுமையான நெருக்கடியில் உள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியலில் ஸ்திரத்தன்மை அவசியம். ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் ஒன்றின் ஊடாகவே அது சாத்தியமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

”அமையும் புதிய அரசாங்கம் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன், மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர வேண்டும்.

எஞ்சியுள்ள 5, 6 மாதங்களில் சமகால அரசாங்கத்துக்கு புதிய விடயமொன்றை செய்ய முடியுமென நான் நினைக்கவில்லை.

நல்லவர்களையும், படித்தவர்களையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது. திருடர்களையும், ஊழல்வாதிகளையும் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களை செய்தது யாரென இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. என்றாலும், அந்த குண்டுத் தாக்குதல்களை நடத்தியது யாரென எனக்குத் தெரியும்.

எனது ஆட்சியில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளிடம்தான் இன்னமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், உண்மையான குற்றவாளியை கண்டறியவில்லை.

நீதிமன்றத்தில் அழைப்பாணை விடுக்கப்பட்டு உண்மையான குற்றவாளி குறித்து வெளிப்படுத்தக் கூறினால் நான் தாக்குதல்களை நடத்தியவர்களின் விவரங்களை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன். அவ்வாறு வெளிப்படுத்தப்படும் உண்மைகளை பாதுகாப்பது நீதியரசர்களின் பொறுப்பாகும்.” எனவும் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.